சில்லரை நேரடி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த மத்தியஸ்தர் திட்டம் - ரிசர்வ் வங்கியின் இரண்டு புதிய திட்டங்கள் : பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

இந்திய ரிசர்வ் வங்கி வாடிக் கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வடிவமைத்துள்ள இரண்டு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிமுகம்செய்தார். சில்லரை நேரடி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த மத்தியஸ்தர் திட்டம் என்ற இருதிட்டங்கள் அறிமுகம் செய்யப்பட் டுள்ளன.

பங்குச் சந்தையில் ஈடுபடும் சில்லரை முதலீட்டாளர்கள் பயன்பெறும் வகையிலும், அவர்கள் எதிர்கொள்ளும் குறைகளை விரைவில் தீர்ப்பதற்காகவும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

காணொலி வாயிலாக இத்திட்டத்தைத் தொடங்கி வைத்துபிரதமர் மோடி பேசியதாவது: சில்லரை முதலீட்டாளர்களும், பொதுமக்களும் எளிதில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடும் வகையிலும், அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் வகையிலும் இடையூறில்லாத வகையில் நடைமுறைகள் இருக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் இந்த 21-ம் நூற்றாண்டு மிகவும் முக்கியமானது.

அந்த வகையில் ரிசர்வ் வங்கிதனது பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறது. நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டுதிட்டங்களை ஆர்பிஐ வகுத்து வருகிறது. அரசின் கடன் பத்திரங்கள் மீதான வட்டி வருமானம் உத்திரவாதத்துடன் கூடியது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியது. அரசின் நிதிச் செயல்பாடு அதன் இலக்கை எட்டும்போது, கடன் பத்திரங்கள் மீதான பலன் அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

இந்த இரண்டு திட்டங்களும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான சூழலை மேலும் விரிவுபடுத்துவதோடு சாதாரண பொதுமக்களும் எளிதில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என நம்புவதாக அவர் மேலும் கூறினார்.

அனைவருக்குமான வங்கிச்சேவை மிகச் சிறந்த பலனளிக்கும் திட்டமாகும். தற்போது அறிமுகம்செய்யப்பட்ட இரண்டு திட்டங்களும் முதலீட்டு வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. பங்குச்சந்தையில் பாதுகாப்பாகவும், எளிதாகவும் முதலீடு செய்ய வழிவகுத்துள்ளது. பங்குச் சந்தை வர்த்தகம் என்பது முன்னர் சில குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு மட்டுமானதாக இருந்தது. தற்போது அது அனைவருக்குமானதாக திறந்து விடப்பட்டுள்ளது என்று மோடி சுட்டிக்காட்டினார்.

2014-ம் ஆண்டில் ஊழல் நடைமுறைகளால் வங்கித் துறை மிக மோசமான நிலையில் இருந்தது. அதன் தாக்கம் இன்றளவிலும் தொடர்கிறது. இதில் பெருமளவு சுமை வங்கிச் சீர்திருத்தம் மூலமாக சீர் செய்யப்பட்டுள்ளது. வேண்டுமென்றே வங்கிக்கடன் பெற்று திரும்ப செலுத்தாத தொழிலதிபர்கள் தொடர்ந்து கடன் பெற முடியாத சூழல் உரு வாக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் வங்கிகளின் வாராக் கடன் அளவு வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடப்படுகிறது. வாராக் கடனை வசூலிக்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன என்றும் மோடி குறிப்பிட்டார். -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்