இந்துத்துவா அமைப்பினரை ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு - காங். மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் சர்ச்சை கருத்து : பாஜக.வினர் கடும் எதிர்ப்பு, டெல்லியில் வழக்கு பதிவு

By ஆர்.ஷபிமுன்னா

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், ‘சன் ரைஸ் ஓவர் அயோத்யா’ என்ற பெயரில் ஆங்கில நூல் ஒன்றை நேற்று வெளியிட்டார். இதில் அவர், இந்துத்துவா அமைப்பினரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினருடன் ஒப்பிட்டுள்ள தாக புகார் எழுந்துள்ளது.

இந்துத்துவா அமைப்பினர் அனைத்து வகையிலும் சமூகத் துக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக சல்மான் தனது நூலில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற விமர்சனங்கள் ‘சாஃப்ரான் ஸ்கை’ என்ற அத்தியாயம் முழுவதிலும் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி வழக்கில் பாஜகவையும் சல்மான் குர்ஷித் விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது. அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை தனது வெற்றியை போல் ஒரு அரசியல் கட்சி கொண்டாடுகிறது என பாஜக பற்றி அவர் கூறியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறும்போது, “சல்மான் தனது நூலில் குறிப்பிட்ட கருத்துகளால் இந்தியர்களின் விஸ்வாசத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து கொண்டு காங்கிரஸ் இப்படி செய்வது ஏன்? இக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி இந்துக்களை மதிப்பது உண்மையானால், சல்மான் கருத்து மீது தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். மவுனம் காப்பார் எனில் அவரது கொள்கையும் இந்துக்களுக்கு எதிரானதாகவே கருதப்படும். இப்படி எழுதியமைக்கு சல்மானை கட்சியிலிருந்து காங்கிரஸ் ஏன் நீக்கக் கூடாது?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சல்மான் குர்ஷித் மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லி காவல் ஆணை யருக்கு டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் பாஜக ஆதரவாள ருமான வினித் ஜிண்டால் புகார் கடிதம் அனுப்பியுள்ளார். பாஜக ஐ.டி. பிரிவின் பொறுப்பாளரான அமித் மாளவியா, டெல்லி போலீஸில் புகார் அளித்துள்ளார். இதன் மீது வழக்கும் பதிவாகி உள்ளது. மேலும் அமித் மாளவியா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலர் சமூகவலைதளங்களில் சல்மானை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

அமித் மாளவியா தனது பதிவில், “முஸ்லிம் வாக்குகளுக்காக இந்துத்துவா அமைப்பை ஜிஹாதி அமைப்புடன் சல்மான் குர்ஷித் ஒப்பிட்டுள்ளார். இதுபோன்ற செயல்களால் வாக்குகளை சேகரிக்கும் ஒரு கட்சியின் தலைவரிடம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி பாஜகவின் முக்கியத் தலைவர் கபில் மிஸ்ரா ட்விட்டரில் சல்மான் நூல் அட்டைப்படத்தை இணைத்து, “இந்துக்கள் மெஜாரிட்டியிலுள்ள நாட்டில் உரிய கவுரவம் கிடைத்தும் முஸ்லிம்களுக்கு திருப்தி இல்லை. இவர்கள் மனதில் இந்த அளவுக்கு விஷம் நிறைந்திருப்பது ஏன்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்