ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட 7 நாடுகளின் தலைவர்கள் நேற்று இந்தியா வந்தனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கப் படைகள் வெளியேறின. இதையடுத்து, தலிபான்கள், அங்கு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளனர். தலிபான் ஆட்சியாளர்களுக்கு சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஒருசில நாடுகளே ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் தலிபான்களுக்கு ஆதரவு தரவில்லை.
இந்த சூழலில், ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்துள்ள தலிபான்களால் ஆசிய கண்டத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக பரவலாக கருத்து எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்தியா தலைமையில் டெல்லியில் இன்றுஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான் ஆகிய 7 நாடுகளின் பாதுகாப்புத் துறை தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்குறிப்பிட்ட நாடுகளின் பாதுகாப்பு விவகாரத் தலைவர்கள் நேற்று டெல்லி வந்தடைந்தனர். இதற்கிடையே, தஜிகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நஸ்ருலோ ரஹ்மத்ஜான், உஸ்பெகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் செயலர் விக்டர் மக்முடோவ் ஆகியோரிடம் அஜித் தோவல் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago