புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் 2017-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் பாஜக முதன் முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அங்கு பிரேன் சிங் முதல்வராக இருக்கிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்குமார் இமோ சிங், யம்தாங் ஹாவோகிப் ஆகிய 2 எம்எல்ஏக்கள் நேற்று அக்கட்சியிலிருந்து விலகி ஆளும் பாஜகவில் இணைந்துள்ளனர். மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால், பாஜகவின் மணிப்பூர் மாநில பொறுப்பாளர் சாம்பிட் பத்ரா ஆகியோர் முன்னிலையில் அவர்கள் இருவரும் கட்சியில் இணைந்துள்ளனர்.
2017-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ராஜ்குமார் இமோ சிங், கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ராஜ்குமார் இமோ சிங் கூறும்போது, “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டில் அமல்படுத்தியுள்ளது. நாட்டின் செழிப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக பிரதமர் மோடி பல்வேறு அரும்பணிகளைச் செய்து வருகிறார். பாஜகவில் இணைவதில் பெருமை கொள்கிறேன்” என்றார்.
2022-ல் மணிப்பூர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 2 எம்எல்ஏக்கள் விலகியுள்ளது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago