மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து வருகிறார் பாஜக எம்.பி. வருண் காந்தி. லக்கிம்பூர் கேரி படுகொலை சம்பவங்களுக்கு நீதி வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் மேனகா காந்தி கூறிவருகிறார்.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து அண்மையில் மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் கூறும்போது, “வேளாண் சட்டங்களை கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் சண்டையிட்டு பார்த்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. டெல்லியில் போராடும் விவசாயிகளின் குரலை காது கொடுத்து மத்திய பாஜக அரசு கேட்காமல் போனால், அக்கட்சியால் தேர்தலில் வெல்ல முடியாது" என்றார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றஒரு நிகழ்ச்சியில் ஆளுநர் சத்யபால் மாலிக் பேசியதாவது: கடந்த ஓராண்டாக டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின்போது சுமார் 600 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களது கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும்.
டெல்லியில் யார் வீட்டு நாயாவது உயிரிழந்தால் கூட, டெல்லி பாஜக தலைவர்கள் இரங்கல் தெரிவிக்கின்றனர். நாய்கள் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் பாஜக தலைவர் களால், இத்தனை விவசாயிகள் உயிரிழந்தும் ஒரு வார்த்தை கூட கூற முடியவில்லையே. அவர்கள் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் இயற்றவில்லையே. ஏன்?
டெல்லியில் கட்டப்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டிடமான சென்டிரல் விஸ்டா திட்டத்துக்கு இவ்வளவு நிதி தேவையில்லை. அந்த புதிய கட்டிடத்துக்குப் பதிலாக அங்கு உலகத் தரத்தில் ஒரு கல்லூரியைக் கட்டலாம்.
நான் இவ்வாறு பேசினால் சர்ச்சை எழும் என்று எனக்குத் தெரியும். டெல்லியைச் சேர்ந்த 2 தலைவர்கள் என்னை ஆளுநர் பதவியில் அமரவைத்தனர். அந்தத் தலைவர்கள் தங்களுக்கு ஒரு பிரச்சினை என்று சொல்லிவிட்டு என்னை பதவி விலகச் சொன்ன நாளில், பதவி விலக நான் ஒரு நிமிடம் கூட தயங்க மாட்டேன்.
பிறக்கும் போதே நான் ஆளுநராக பிறக்கவில்லை. என்னிடம் இருப்பதை இழக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். ஆனால் என்னுடைய உறுதிப்பாட்டை என்னால் விட்டுவிட முடியாது. என்னால் பதவியை ராஜிநாமா செய்ய முடியும். ஆனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதையும், தோற்கடிக்கப்படு வதையும் பார்க்க முடியாது.
விவசாயிகள் போராட்டத்தின்போது இத்தனை பேர் உயிரிழந்ததை நான் பார்த்ததே இல்லை. இன்று எது வேண்டுமானாலும் நடக்கலாம். இன்று, ஆட்சியில் இருப்பதால் மோசமாக நடந்து கொள்கிறீர்கள். ஆனால், அதன்பின்விளைவுகள் என்னவென்று தெரியவில்லை.
கார்கில் போர் நடக்கும் போது, இந்த விவசாயிகளின் மகன்கள் போராடுவதற்காக மலை உச்சிகளுக்கு அனுப்பப் படுகிறார்கள். மக்கள் ஒரு நாள் அநீதிக்கு எதிர்த்து எதிர்வினையாற்றலாம். அரசுக்கு எதிராக விவசாயிகள் எதிர்வினையாற்றும் நாள் வருவதை பார்க்க நான் விரும்பவில்லை. கடந்த குடியரசு தின விழாவின்போது விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெற்றது. அந்த தினத்தில் நடந்தது அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய அரசுக்கு எதிராக பாஜக மூத்த தலைவரும், ஆளுநருமான சத்யபால் மாலிக் பேசியுள்ளது கட்சிக்கும், அரசுக்கும் பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago