புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடர் வரும் 29-ம் தேதி தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 23-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடக்க உள்ளது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இதற்கு நேற்று ஒப்புதல் அளித்தது. மொத்தம் 20 வேலை நாட்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
கரோனா தொற்று காரணமாக நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த ஆண்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் கடந்த மூன்று கூட்டத் தொடர்களின் நாட்களும் கரோனா தொற்று காரணமாக குறைக்கப்பட்டன. வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரும் கரோனா விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பஞ்சாப், உத்தராகண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா சட்டப்பேரவைகளுக்கு தேர்தல்கள் நடக்க உள்ள நிலையில், வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago