இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையான உயர்வை சந்தித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து விற்பனை ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்தியஅரசு அண்மையில் குறைத்தது. அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.5-ம், டீசல் மீதானகலால் வரி ரூ.10-ம் குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு கடந்த 4-ம் தேதி முதல் அமலுக்குவந்தது. இதன் தொடர்ச்சியாக, பாஜக ஆளும் இமாச்சலப் பிரதேசம், அசாம், மத்திய பிரதேசம், கர்நாடகா, உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, திரிபுரா, குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியையும் (வாட்) குறைத்தன. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்டஎதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், பஞ்சாபில் பெட்ரோல் விலை மீதான வாட் வரியில் லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் மீதான வாட் வரியில் ரூ.10-ம் குறைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி நேற்று அறிவித்தார். கடந்த 70ஆண்டுகளில் இதுபோன்ற விலைக் குறைப்பை எந்த மாநிலமும் செய்ததில்லை எனக் கூறிய அவர், டெல்லியை விட பஞ்சாபில் பெட்ரோல், டீசல் விலை தற்போது குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த விலைக் குறைப்பானது இன்று முதல் அமலுக்கு வருகிறது. தற்போது பஞ்சாபில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.106.20 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.89.83 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago