கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பு மருந்துக்கு கடந்த 3-ம் தேதி உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூஹெச்ஓ) அங்கீகாரம் அளித்தது. அவசர கால மருந்தாக பட்டியலிடப்பட்டு (இயுஎல்) இதற்கான அனுமதியை டபிள்யூஹெச்ஓ அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து பிற நாடுகளிலும் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அங்கீ காரத்தைப் பெற மத்திய வெளியுறவு அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
உலக சுகாதார நிறுவனம் கோவாக்ஸினுக்கு அங்கீகாரம் அளித்ததைத் தொடர்ந்து பலநாடுகள் இந்த தடுப்பூசி மருந்தை அங்கீகரிக்கும் என்றும் இத்தகைய தடுப்பூசி மருந்து போட்டுக் கொண்டவர்களை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சில நாடுகள் இரண்டு தவணை தடுப்பூசி மருந்து போட்டுக் கொண்ட இந்தியர்களை, கட்டாய தனிமைக்குட்படுத்தாமல் அனுமதிக்கிறது. இவ்விதம் அனுமதிக்கும் நாடுகளுக்கு சென்ற இந்தியர்களில் பெரும்பாலானோர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாவர்.
இந்த தடுப்பு மருந்தானது பிரிட்டனின் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து தயாரிக்கப்பட்டதாகும். இந்த தடுப்பு மருந்தை இதுவரை 12-க்கும் மேலான நாடுகள் அங்கீகரித்துள்ளன. நவம்பர் 8-ம் தேதியிலிருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பு மருந்து போட்டுக் கொண்ட பயணிகளை அமெரிக்கா அங்கீகரித்து தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் நிறுவனம் கோவாக்ஸினை தயாரித்துள்ளது. நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் 6 தடுப்பூசி மருந்துகளில் இதுவும் ஒன்றாகும். இது ஜனவரி 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் கோவிஷீல்டுடன் பயன்படுத்தப்பட்டது. மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி மருந்தும் இதுவே. கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசி மருந்துகளுக்கு மட்டுமே இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் (டிஜிசிஐ) அனுமதி வழங்கியிருந்தது. இது தவிர அகமதாபாத்தைச் சேர்ந்த சைடஸ் காடிலா தயாரித்த சைகோவ்-டி தடுப்பூசி மருந்துக்கும் அனுமதி பின்னர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.-பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago