போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட - ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை :

போதைப்பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கானுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை யடுத்து மும்பை சிறையிலிருந்து அவர் நேற்று விடுதலை செய்யப் பட்டார்.

மும்பையில் இருந்து கோவா நோக்கி சென்ற சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் கடந்த 2-ம் தேதி சோதனை நடத்தினர். அப்போது போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் (23), அவரது நண்பர்கள் உள்ளிட்ட 8 பேரை கைதுசெய்தனர்.

இதையடுத்து, ஆர்யன்கான் மும்பை ஆர்த்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். ஆர்யன் கான் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், கடந்த 28-ம் தேதி ஆர்யன் உட்பட மூவருக்கு ஜாமீன் வழங்கியது. எனினும், ஜாமீன் தொடர்பான விரிவான உத்தரவை 29-ம் தேதி நீதிபதி பிறப்பித்தார். அதில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வெள்ளிக்கிழமைதோறும் காலை 11 மணி முதல் 12 மணிக்குள் மும்பையில் உள்ள என்சிபி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும். நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது. ஒவ்வொருவரும் ரூ.1 லட்சம் மதிப்பிலான சொந்த பத்திரம்மற்றும் இதே தொகைக்கு நிகரானபிணை பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

எனினும் ஜாமீன் உத்தரவு நகல் சிறை அதிகாரிக்கு தாமதமாக கிடைத்ததால் அன்றைய தினம் ஆர்யன் விடுதலை செய்யப்படவில்லை. அதாவது சிறை விதிகளின்படி மாலை 5.30 மணிக்கு மேல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது. இந்நிலையில், ஆர்யன் கான் நேற்று காலையில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து, சுமார் 25 நாட்களுக்குப் பிறகு அவர் நேற்று வீடு திரும்பினார். அப்போது ஷாருக் கான் வீடு முன்பு கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள், ஆர்யனுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE