திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் (எஸ்விபிசி) அக்டோபர் 11 முதல் கன்னடம் மற்றும் இந்தியில் ஒளிபரப்பு தொடங்கவுள்ளது. தொடக்க விழாவில் பங்கேற்க வரும்படி கர்நாடக முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 15-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருள உள்ளனர்.
கரோனா அபாயம் கருதி மாடவீதிகளில் வழக்கமான வாகன சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. கோயில் உள்ளேயே வாகன சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கருடசேவை நாளான வரும் 11-ம் தேதி ஆந்திர முதல்வர் ஜெகன் திருமலைக்கு வந்து, பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்குகிறார். அதேநாளில் தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் கன்னடம் மற்றும் இந்தி மொழியில் தனது ஒளிபரப்பை தொடங்குகிறது.
தொடக்க விழாவுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை அழைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி, தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி உள்ளிட்டோர் பெங்களூருவில் முதல்வர் பசவராஜ் பொம்மையை நேற்று சந்தித்தனர். அப்போது பிரம்மோற்சவம் மற்றும் கன்னட ஒளிபரப்பு தொடக்க விழாவில் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்தனர்.
இதனிடையே பிரம்மோற்சவ ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருமலையில் நேற்று நடைபெற்றது.
இதில், “பிரம்மோற்சவ நாட்களில் தரிசன டிக்கெட்டுடன் 2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது 3 நாட்களுக்குள் பெறப்பட்ட கரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்களை மட்டுமே திருமலையில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அக்டோபர் 11-ல் முதல்வர் ஜெகன் வருகை தரும் நாளில் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago