ஊர்களுக்கு உள்ள முஸ்லிம் பெயர்களை உத்தர பிரதேச அரசு மாற்ற நடவடிக்கை : தேர்தலுக்கான இந்து வாக்கு வங்கி அரசியல் என புகார்

By ஆர்.ஷபிமுன்னா

இந்தியாவில் சுமார் 900 ஆண்டு கள் பல்வேறு இடங்களில் முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி புரிந்ததாக வரலாற்று பதிவுகள் உள்ளன. இதன் காரணமாக பல ஊர்களுக்கு முஸ்லிம் பெயர்கள் உள்ளன.

குறிப்பாக உ.பி.யில் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் முஸ்லிம்களின் பெயர்கள் அதிகமாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எதையும் சுதந்திரத்திற்கு பின் ஆட்சிக்குவந்த அரசுகள் மாற்றவில்லை. கடந்த 2017-ல் உ.பி.யில் ஆட்சி அமைத்த பாஜக அவற்றை மாற்றத் துவங்கி விட்டது.

ராமர் கோயில் அமைந்துள்ள மாவட்டமான பைஸாபாத்தை அயோத்யா என முதலாவதாக மாற்றப்பட்டது. அடுத்து அலகாபாத் மாவட்டம் பிரயாக்ராஜ் என்றானது. மொகல்சராய் என்பது தீன் தயாள் உபாத்யா நகர் என மாற்றப்பட்ட பட்டியல் நீளத் துவங்கி உள்ளது.

தற்போது அமேதிக்கு அருகில் உள்ள சுல்தான்பூர் பெயரை குஷ் பவன்பூர் என மாற்றப்பட உள்ளது. குஷ் என்பது ராமரின் மூத்த மகனின் பெயர் ஆகும். இதற்கு முன் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைந்த அலிகர் என்பது ஹரிகர் என மாற்றக் கோரப்பட்டுள்ளது. பெரோஸாபாத் என்பது சந்திரா நகர் என்றும், மெயின்புரியானது மாயன் நகர்எனவும் மாற்ற கிராமப் பஞ்சாயத்துக்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவற்றை முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அமைச்சரவை கூடி முடிவு செய்ய உள்ளது. உன்னாவ் மாவட்டத்தின் மியான்கன்ச் பஞ் சாயத்தின் பெயரை மாயாகன்ச் என மாற்றதீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கானப் பஞ்சாயத்து கூட்டம் ஆகஸ்ட் 16-ல் அதன் தலைவரான நக்மா தலைமையில் கூடி தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கான கடிதம் அப்பகுதியின் பாஜக எம்எல்ஏவான பம்பா லால்திவாகர் என்பவரால் பஞ்சாயத்திடம் அளிக்கப்பட்டது. உ.பி.யில் அடுத்த வருடம் துவக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தனது இந்துத்துவா கொள்கையை தீவிரப்படுத்தி பாஜக பிரச்சாரம் செய்வதால் இந்த முஸ்லிம் பெயர்களின் மாற்றங்கள் நடக்கிறது எனப் புகார் நிலவுகிறது.

இதனிடையே, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சஹரான்பூர் மாவட்டத்திலுள்ள தியோபந்த் பெயரையும் மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது. இத்தொகுதியின் பாஜக எம்எல்ஏவான பிர்ஜேஷ்சிங், தியோபந்தை தேவ்ரந்த் என மாற்ற வலியுறுத்தி வருகிறார். தியோபந்தில் தாரூல் உலூம் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பழம்பெரும் மதரஸாக்கள் அமைந் துள்ளன. எனவே, இப்பெயர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பத் துவங்கியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்