'தீனதயாள் அந்தியோதயா' திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,654 கோடி நிதியுதவியை பிரதமர் மோடி நேற்று வழங்கினார்.
கரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருந்த ஊரடங்கு காரணமாக, நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை சரிசெய்வதற்காக பல லட்சம் கோடி செலவில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, 'தீன்தயாள் அந்தியோதயா' திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் செயல்படும் பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலமாக நேற்று நிதியுதவிகளை விடுவித்தார். அதன்படி, 4 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,625 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. பெண்கள் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7,500 பேருக்கு புதிய தொழில்களை தொடங்குவதற்காக ரூ.25 கோடி நிதியுதவி விடுவிக்கப்பட்டது. 75 விவசாய உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.4.13 கோடி நிதி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பெண்கள் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
ஒரு நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டுமானால் அங்குள்ள பெண்கள் பல துறைகளில் முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியம். பெண்கள் நினைத்தால் ஒரு சமூகத்தில் எத்தகைய மாற்றத்தைவேண்டுமானாலும் கொண்டு வர முடியும். எந்த துறையிலும் கோலோச்சி அதில்சாதனை படைக்கும் திறமை பெண்களுக்கு மட்டுமே இருக்கிறது. இதனை இன்று நாம் கண்கூடாகவே கண்டு வருகிறோம்.
பெண்களுக்கும், பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கும் மத்திய அரசு ஏராளமான நிதியுதவிகளை வழங்கி வருகிறது. இதற்கு முன்பு இருந்த எந்தெவொரு ஆட்சியிலும் பெண்களுக்கு இத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்பட்டதில்லை.
கரோனா காலத்தில் பெண்கள் சுய உதவிக் குழுவினர் சமூகத்துக்கு ஆற்றிய பணிகளை என்றும் மறக்க முடியாது. முகக்கவசம் தயாரிப்பு முதல் வீதியில் பசித்து கிடந்தோருக்கு உணவு வழங்கும் வரையில் அனைத்து தளங்களிலும் பெண்கள் சுய உதவிக் குழுவினரின் பங்கு மகத்தானதாக இருந்தது. உங்களின் முன்னேற்றம் என்பது சமூகத்தின் முன்னேற்றம் ஆகும். எனவே, உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உரிய நேரத்தில் மத்திய அரசு வழங்கும் என உறுதியளிக்கிறேன்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75-வது ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். இந்த நேரத்தில் பழைய சாதனைகள் பற்றி மட்டும் பேசாமல், புதிய இலக்குகளை நிர்ணயித்து அதனை நோக்கி வேகமாக நாம் செல்ல வேண்டும். நம் நாட்டில் உள்ள பெண்கள் புதிய உத்வேகத்துடனும், கூடுதல் ஆற்றலுடனும் இயங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அனைத்து துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நீங்கள் முன்வர வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். - பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago