மக்களவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - சபாநாயகருடன் பிரதமர் மோடி, சோனியா ஆலோசனை :

By செய்திப்பிரிவு

மக்களவை நேற்று மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து சபாநாயகர் அறையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்றனர்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 19-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 13 வரை கூட்டத் தொடர் நடைபெற விருந்தது. ஆனால், கூட்டத் தொடரின் முதல் நாளில் இருந்தே பெகாசஸ் உளவு விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கு இடையே மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப் பட்டுள்ளதாக அரசுக்கு எதிராக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் மக்களவையை 2 நாட்களுக்கு முன்னதாகவே முடித்துக் கொள்வதாகவும் அவையை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று அறிவித்தார். அதன்பிறகு அனைத்துக் கட்சி தலைவர்களையும் சபாநாயகர் ஓம் பிர்லா தனது அறையில் சந்தித்தார். கூட்டத் தொடரின் இறுதி நாளில் இதுபோன்ற கூட்டம் நடைபெறுவது வழக்கம்

இக்கூட்டத்தில் பிரதமர் மோடியும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அடுத்தடுத்த சோபாக்களில் அமர்ந்திருந்தனர். இது தொடர்பான வீடியோவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் திரிணமூல் காங்கிரஸ், அகாலி தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் அமர்ந்திருக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இக்கூட்டத்தில், “அவையில் விவாதங்கள் மற்றும் கலந்துரை யாடலை ஊக்குவிக்க வேண்டும். இதுவே மக்களுக்கு பணியாற்றும் வழியாக இருக்கும்” என ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார்.

இதனிடையே மாநிலங் களவையில் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் நேற்றும் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சியினர் அவையின் மையப்பகுதியில் இருந்த மேஜை மீது ஏறி நின்று முழக்கமிட்டனர். அவை விதிகளுக்கான நூலை உறுப்பினர் ஒருவர் அவைத் தலைவரை நோக்கி வீசினார். உறுப்பினர்களின் இந்த செயலுக்கு அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மிகுந்த வேதனை தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்