பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் - சமூக ஊடகங்களில் விவாதிப்பதை மனுதாரர்கள் தவிர்க்க வேண்டும் : உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சர்வதேச நாளேடுகள் செய்தி வெளியிட்டன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றதலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்றுவிசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜராகி வாதாடினர்.

அப்போது தலைமை நீதிபதிஎன்.வி.ரமணா அமர்வு கூறுகையில், “பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும்போது, நீதிமன்றத்துக்கு வெளியே இணையாக சமூக ஊடகங்களில் விவாதங்கள் செய்வதைத் தவிர்க்கவேண்டும் என்றுதான் நாங்கள் தெரிவிக்கிறோம்.

இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர்கள் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால், அதை பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யலாம். அதை நீதிமன்றத்தில் விவாதிக் கலாம்" எனத் தெரிவித்தது.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்