தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தெலங்கானா மாநில பாஜக பொறுப்பாளர் தருண் சுக், மற்றும்மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
தனி தெலங்கானா மாநில போராட்டத்தின்போது, தற்போதைய தெலங்கானா மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவுடன் இணைந்து பல போராட்டங்களை சந்தித்தவர் ஈடல ராஜேந்தர். மேலும், இவர் பல முறை தனிதெலங்கானாவுக்காக தனதுஎம்எல்ஏ பதவியை ராஜினாமாசெய்து மீண்டும் இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 17 ஆண்டுகளாக தொடர்ந்து அரசியலில் கே. சந்திரசேகர ராவுடன் பயணித்த இவர், தனி தெலங்கானா மாநிலம் உருவானதும் முதலில் நிதித்துறை அமைச்சராகவும், அதன்பின்னர், 2-ம் முறை தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியை பிடித்ததும், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இவருக்கு கட்சியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால், சில நாட்களுக்கு முன்னர், இவர் மீது நில ஆக்கிரமிப்பு புகார் எழுந்தது. இதனால், இவரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதும் ஈடல ராஜேந்தரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கே.சந்திரசேகர ராவ் தனது மகனும், அமைச்சருமான கே. டி. ராமாராவை வாரிசு அடிப்படையில் தெலங்கானாவின் முதல்வர் ஆக்குவதற்காகவே, மூத்த தலைவரான ஈடல ராஜேந்திராவை அமைச்சர் பதவியிலிருந்து விலக்கினார் என குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியதாக ஈடல ராஜேந்தர் அறிவித்தார்.
பின்னர், தனது ஹூஜூராபாத் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்பதாக சபாநாயகர் நிவாஸ் ரெட்டி அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று டெல்லியில் ஈடல ராஜேந்தர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தெலங்கானா மாநில பாஜக பொறுப்பாளர் தருண் சுக், மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி ஆகியோரின் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்கள் பலரும் பாஜகவில் இணைந்தனர்.
பின்னர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசும்போது, ‘‘ஈடல ராஜேந்தர் தெலங்கானா அரசில் முக்கிய பங்காற்றினார். நிதி, மருத்துவ துறையில் தனது முத்திரைகளை பதித்தார். அவரும், அவரது ஆதரவாளர்களும் பாஜகவில் இணைந்ததால் தெலங் கானாவில் பாஜகவின் பலம் அதிகரித்துள்ளது.
தென்னிந்தியாவில் கர்நாடகாவை தொடர்ந்து தெலங்கானாவில் பாஜகவின் பலம் அதிகரித்து வருகிறது’’ என கூறினார். ஈடல ராஜேந்தர் பேசும்போது, ‘‘கட்சியின் மேலிடம் கூறுவதை செய்து பாஜகவை தெலங்கானாவில் பலப்படுத்துவேன்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago