இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளை தொடர்ந்து, 3-வதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இதன் ஒரு டோஸ் ரூ.995.40-க்கு வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் என 2 தடுப்பூசிகள் மத்திய அரசின் அனுமதியுடன் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதன் முதல் ஊசி நேற்று ஹைதராபாத்தில் தீபக் ஸப்ரா என்பருக்கு செலுத்தப்பட்டது. டாக்டர் ரெட்டீஸ் மருந்து நிறுவனம், ஸ்புட்னிக்-வி தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து முறையாக 1.5 லட்சம் மருந்துகள் கடந்த 1-ம் தேதி ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து நேரடியாக ஹைதராபாத் வந்தது. பின்னர் பல்வேறு சோதனைகளுக்கு பிறகு, இதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 13-ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து நேற்று முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிரபல மருந்து நிறுவனமாக டாக்டர் ரெட்டீஸ், 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்க உள்ளது. ஜூலை மாதம் முதல் இதன் தயாரிப்பு பணிகள் ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது. அதற்குள் 1.5 லட்சம் மருந்துகளை இந்நிறுவனம் வரவழைத்துள்ளது. ஒரு தடுப்பூசி வெளி சந்தையில் ரூ.948 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியை இணைத்தால் ரூ.995.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் ஜி.வி.பிரசாத் கூறுகையில், ‘‘கரோனாவை ஒழிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகமிக அவசியம். இப்போதுள்ள நிலைமையில் நம் நாட்டுக்கு உறுதுணையாக இருப்பதை லட்சியமாக கொண்டு ஸ்புட்னிக்-வி வரவழைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதன் தயாரிப்பு பணிகள் தொடங்கும். ஸ்புட்னிக்-வி 91.6 சதவீதம் வரை கரோனாவை கட்டுப்படுத்தும் தன்மை உடையது’’ என்றார்.
தற்போதைக்கு ரஷ்யாவில் இருந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால், அதன் விலை ஒரு டோஸ் ரூ.995.40 ஆக உள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்கும் போது, விலை இன்னும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரவ நிலையில் உள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசியை மைனஸ் 18 டிகிரி வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். பவுடர் தடுப்பு மருந்தை 2 முதல் 8 டிகிரியில் வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago