திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றதை ஆந்திராவில், பிரகாசம் மாவட்டம், ஓங்கோல் அருகே உள்ள செருவு கொம்மபாளையம் கிராமத்தில் பேனர், தோரணங்கள் கட்டி கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து செருவு கொம்ம பாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஸ்வருலு கூறியதாவது:
ஆந்திரா, தமிழகம் எல்லாம் ஒன்றாக இருந்த சமயத்தில், பல மன்னர்கள் இப்பகுதிகளை ஆண்டுள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூதாதை யர்கள் (தாத்தா) இந்த கால கட்டத்தில் விஜயநகர மன்னர்களின் அரசவையில் வித்வான்களாக பணியாற்றியுள்ளனர்.
அங்கிருந்து ஓங்கோல் அருகே இருந்த பெள்ளூரு சமஸ்தானத்தில் இவர்களது மூதாதையர்கள் நாகஸ்வர வித்வான்களாக வெங்கடகிரி அரசரிடம் பணி யாற்றினர். அப்போது, இவர்களின் வம்சாவளியினருக்கு பெள்ளூரு சமஸ்தானம் சார்பில் 5 குடும்பத் தாருக்கு தலா 30 ஏக்கர் நிலம் என மொத்தம் 150 ஏக்கர் நிலம் மானியமாக வழங்கப்பட்டது. இதில் அவர்கள் விவசாயம் செய்து வந்தனர். வறட்சி நிலவிய போது, நிலங்களை விற்றுவிட்டு இவர்கள் தஞ்சாவூருக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இப்போதுகூட இவர்களுடைய மூதாதையரின் குடும்பத்தார் இங்கு வசிக்கின்றனர்.
கடந்த 1960-ம் ஆண்டு, கருணாநிதி ஆந்திராவின் ஏலூருக்கு வந்தார். டிடெக்டிவ் நாவலாசிரியர்கள் சங்க கூட்டத்தில் கருணாநிதி தலைமையேற்க வந்தார். அப்போது அவர் தமது மூதாதையர் வாழ்ந்த ஊரான செருவு கொம்மபாளையம் குறித்தும், அங்குள்ள வம்சாவளியினர் குறித்தும், இப்போது வசித்து வருபவர்கள் குறித்தும் ஆர்வத் தோடு கேட்டறிந்தார் என ஜலந்தர் பாலகிருஷ்ணா எனும் நாவலாசிரியர் கூறுவதுண்டு.
திருவையாறில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை உற்சவத் தில் கலந்துகொள்ள இந்த ஊரைசேர்ந்த பல நாகஸ்வர கலைஞர்கள் செல்வது வழக்கம். அப்படியே சென்னையில் கருணாநிதியை சந்தித்து விட்டு வருவதும் வழக்கம்.
எங்களது ஊரை சேர்ந்த ஸ்டாலின் தமிழக முதல்வராகி இருப்பது எங்கள் ஊருக்கே பெருமை. எங்களது கிராம வரலாற்றில் கருணாநிதியின் குடும்பமும் இடம் பெற்றுள்ளது. அதிலிருந்து ஒருவர் தமிழகத்தின் முதல்வராகி இருப்பது எங்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. விரைவில் நாங்கள் ஸ்டாலினை சந்திப்போம். இவ்வாறு வெங்க டேஸ்வருலு கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago