திருப்பதி - சித்தூர் நெடுஞ்சாலையில் ரூ. 2.5 கோடி செம்மரம் பறிமுதல் : 4 பேர் கைது

By என். மகேஷ்குமார்

திருப்பதி-சித்தூர் நெடுஞ்சாலையில் ரூ. 2.5 கோடி மதிப்புள்ள செம்மரங்களை போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியிலிருந்து செம்மரங்களை ஒரு கும்பல் வெட்டிக் கடத்திச் செல்வதாக சித்தூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் போலீஸ் படையினர் திருப்பதி - சித்தூர் நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் பெனுமூரு கூட்டு ரோடு சந்திப்பில் 2 கார்களும், ஒரு லாரியும் வேகமாக வருவதைக் கண்ட போலீஸார், அவற்றை நிறுத்துமாறு கைகளை அசைத்தனர். ஆனால் வாகனங்கள் நிற்காமல் சென்றதால், போலீஸார் தங்கள் வாகனத்தில் விரட்டிச் சென்று அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அவற்றில் இருந்த 4 பேரை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் போலீஸார் நடத்திய சோதனையில் லாரி மற்றும் 2 கார்களில் 182 செம்மரங்கள் இருப்பது தெரியவந்தது.

5.2 டன் எடையுள்ள இவற்றின் மதிப்பு ரூ. 2.5 கோடி என கூறப்படுகிறது.

இதையடுத்து லாரி மற்றும் கார்களில் வந்த கடப்பாவை சேர்ந்த சிவய்யா (31), நெல்லூரை சேர்ந்த கிருஷ்ணய்யா (63), திருப்பதியை சேர்ந்த கிரண் (25), வேலூரை சேர்ந்த பாலாஜி (19) ஆகிய நால்வரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இவர்களின் 3 வாகனங்கள் மற்றும் 2.5 கோடி மதிப்புள்ள செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்