மழைநீரை சேகரிக்க 100 நாள் இயக்கத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மனதின் குரல் (மன் கி பாத்)வானொலி நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதன்படி 74-வது மனதின் குரல் நிகழ்ச்சி வானொலியில் நேற்று ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்திய கலாச்சாரம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. நமதுநாகரிகம், விழாக்கள் நதிகளோடு தொடர்புடையவை. மகம் மாதத்தில் நதிகளில் புனித நீராடி, வழிபாடுகளை நடத்தி வருகிறோம். இந்த மாதத்தில் ஹரித்வார் கும்பமேளா விழா நடைபெறுகிறது. இந்தியர்களைப் பொறுத்தவரை தண்ணீரே, வாழ்க்கை.
தி.மலைக்கு பாராட்டு
பண்டைய காலத்தில் கிராமங்கள், நகரங்களில் அமைந்துள்ள குளங்கள், கிணறுகளை அனைத்து தரப்பு மக்களும் இணைந்து பராமரித்து பாதுகாத்தனர். இப்போது அந்த வழக்கம் மறைந்துவிட்டது.எனினும் தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்த மக்கள், பழைய வழக்கத்தை புதிய உத்வேகத்தோடு செயல்படுத்துகின்றனர். அப்பகுதி மக்கள் நீர்நிலைகளில் தண்ணீரை சேமிப்பது தொடர்பான விழிப்புணர்வு இயக்கத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். பாழடைந்த கிணறுகளை தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வரு கின்றனர். அவர்களின் சேவையை பாராட்டுகிறேன்.
பெரும்பான்மையான மாநிலங்களில் மே, ஜூன் மாதங்களில் மழை பெய்கிறது. இப்போதே மழை நீர் சேகரிப்புக்காக 100 நாள் இயக்கத்தை நாம் தொடங்க வேண்டும். இதற்காக இன்னும் சில நாட்களில் ஜல சக்தி துறை சார்பில் ஜல் சக்தி அபியான் திட்டம் தொடங்கப்படும். இதன்படி, ‘எப்போது, எங்கு மழை பெய்தாலும் அந்த மழைநீரை சிந்தாமல் சிதறாமல் சேகரிக்க வேண்டும்' என்ற லட்சியத்தை அனைவரும் கண்ணும் கருத்துமாக கடைப்பிடிக்க வேண்டும். இந்த லட்சிய திட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
மதுரை முருகேசன்
மதுரையை சேர்ந்த முருகேசன் வாழை மரத்தின் நாரில் இருந்து பைகள், கைவினைப் பொருட்களை தயாரிக்கிறார். இதற்காக பிரத்யேக இயந்திரத்தை வடி வமைத்துள்ளார். முருகேசனின் புதுமையான கண்டுபிடிப்பு சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது. அதேநேரம்விவசாயிகளுக்கு கூடுதல் வருவாயையும் ஈட்டி கொடுக்கிறது. நாடு முழுவதும் மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு எழுத தயாராகி வருகின்றனர். கவலை, பயத்தை தூக்கிஎறிந்துவிட்டு போர் வீரனாக தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.தமிழ் கற்காதது வேதனை அளிக்கிறது
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
ஹைதராபாத்தைச் சேர்ந்த அபர்ணா என்னிடம் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். பல ஆண்டுகள் முதல்வராக பணியாற்றி உள்ளீர்கள். தற்போது சில ஆண்டுகள் பிரதமராக பணியாற்றி வருகிறீர்கள். இதில் எதையாவது இழந்ததாக உணர்கிறீர்களா என்று அபர்ணா கேட்டுள்ளார். இந்தக் கேள்வி எளிமையாக தோன்றினாலும் பதில் அளிக்க கடினமாக இருக்கிறது.
நான் இழந்தது, என்னுடைய குறைகளில் மிகப்பெரிய குறையாக ஒன்றை கருதுகிறேன். உலகின் மிகப் பழமையான, தொன்மையான தமிழ் மொழியை கற்றுக் கொள்ளாதது வேதனை அளிக்கிறது. தமிழ் மிக அழகான மொழி. உலகம் முழுவதும் அந்த மொழி பரந்து, விரிந்து வியாபித்து பரவி உள்ளது. தமிழ் மொழியின் இலக்கியங்கள், தமிழ் கவிதைகளின் சிறப்பு, செழிப்பு குறித்து பலரும் என்னிடம் கூறியிருக்கிறார்கள்.
சம்ஸ்கிருத கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி முழுவதும் சம்ஸ்கிருதத்தில் வர்ணனை செய்யப்பட்டது. இதேபோல இந்திய விளையாட்டு போட்டிகள், அந்தந்த மொழிகளில் வர்ணனை செய்யப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago