மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அங்குள்ள ஒரு பள்ளியின் விடுதியில் 225 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பரில் இந்தியாவில் கரோனா வைரஸ் உச்சத்தில் இருந்தது. அப்போது நாளொன்றுக்கு 90,000 முதல் ஒரு லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. கடந்த அக்டோபருக்கு பிறகு தினசரி தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் கடந்த டிசம்பர், ஜனவரியில் தினசரி தொற்று 2,000-க்கும் கீழ் குறைந்து ஆறுதல் அளித்தது.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக விதர்பாவின் 11 மாவட்டங்கள் வைரஸின் மையப்புள்ளியாக மாறியுள்ளன. இதில் அமராவதி மாவட்டத்தில் ஒரு வார முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டிருக்கிறது. இதர மாவட்டங்களில் ஊரடங்குக்கு இணையானகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விதர்பாவின் வாஷிம் மாவட்டம், பாவ்னாவில் அரசு பள்ளி செயல்படுகிறது. அங்குள்ள விடுதியில் 327 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். விடுதியில் சில மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்புஏற்பட்டதால் அனைத்து மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை 225 மாணவர்களுக்கு கரோனா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 ஆசிரியர்களும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் சண்முகராஜன், பள்ளிக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி, பள்ளிக்கு சீல் வைத்தார்.
கடந்த 4 மாதங்களில் மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் 8,807 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக தேசியஅளவிலான தினசரி வைரஸ் தொற்று 16,738 ஆக உயர்ந்துள்ளது.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மும்பை, புனே, நாக்பூர்உள்ளிட்ட நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மும்பையில் ஒரு கட்டிடத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அந்த கட்டிடம் சீல் வைக்கப்படுகிறது. புனேவில் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாக்பூரில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது.
"கரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் செய்யப்படும்" என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே சில நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago