நாட்டில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரும் மார்ச் 1-ம் தேதி முதல் இலவச கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதலாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி செலுத்துவதில் கரோனா முன்களப் பணியாளர்களுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகின்றன. இதுவரை 1.18 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பதிவில் நேற்று கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது முதலாகவே, வைரஸ் பரவல் பெருமளவில் கட்டுப்பட்டுள்ளது. எனவே, தடுப்பூசி பயன்பாட்டைவிரிவுப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் முதல்கட்டமாக, நாட்டில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு கரோனாதடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களை உடைய 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.
தடுப்பூசி செலுத்துவதற்காக நாடு முழுவதும் 10 ஆயிரம் அரசு மையங்களும், 20 ஆயிரம் தனியார் மையங்களும் தயார் நிிலையில் உள்ளன. இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் ஆட்சி?
இதனிடையே, புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், “புதுச்சேரியில் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமைக் கோராததால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்றார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago