உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் மோடேரா ஸ்டேடியம் நரேந்திர மோடி மைதானமானது புதிய பொலிவுடன் திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்

By செய்திப்பிரிவு

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள மோடேரா ஸ்டேடியம் நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றப்பட்டது. புதிய பொலிவுடன் காணப்படும் இந்த மைதானத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்தார்.

அகமதாபாத்தில் உள்ள மோடேரா கிரிக்கெட் மைதானம் ரூ.800 கோடி செலவில் 63 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானமானது ஒலிம்பிக்கில் கால்பந்து போட்டிக்கு பயன்படுத்தப்படும் மைதானத்தின் அளவை போன்று 32 மடங்கு பெரியது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இங்கு 1.32 லட்சம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற புகழை இந்த மைதானம் பெற்றுள்ளது. இதற்கு முன்னர் 90 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் கட்டப்பட்டிருந்த ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானமே பெரியதாக கருதப்பட்டு வந்தது.

இந்நிலையில் சீரமைக்கப்பட்ட மோடேரா மைதானத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஸ்டேடியத்துக்கு 'நரேந்திர மோடி மைதானம்' என பெயர் சூட்டப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் கலந்து கொண்டு மைதானத்தை முறைப்படி திறந்துவைத்தார்.

விழாவில் அவர் பேசும்போது, “இந்த மைதானம் உருவாகும் எண்ணம் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது உண்டானது. அவர் அப்போது குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார். இந்த மைதானம் சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கு சிறந்த உதாரணம்” என்றார்.

தொடர்ந்து இதே பகுதியில் கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, கபடி, குத்துச்சண்டை மற்றும் புல்வெளி டென்னிஸ் போன்ற துறைகளுக்காக கட்டப்பட உள்ள சர்தார் படேல் விளையாட்டு அரங்கத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார்.

நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் பகலிரவு போட்டியாக தொடங்கியது. இந்த மைதானத்தில் 11 ஆடுகளங்கள் சிவப்பு மற்றும் கருப்பு மண்ணால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட் டால் 30 நிமிடங்களில் முழுவீச்சில் இந்த மைதானத்தை தயார் செய்துவிட முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE