குஜராத் உள்ளாட்சித் தேர்தலில்ஆளும் பாஜக 6 மாநகராட்சி களையும் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது.
குஜராத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக கடந்த 21-ம்தேதி 6 மாநகராட்சிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் அகமதாபாத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 192 வார்டுகளில் பாஜக 158 வார்டுகளை கைப்பற் றியது. காங்கிரஸுக்கு 14 வார்டுகள் கிடைத்தன. சூரத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 120 வார்டுகளில் பாஜக 93 வார்டுகளில் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து ஆம் ஆத்மி 27 வார்டுகளைக் கைப்பற்றியது. காங்கிரஸுக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை.
இதுவரை நடைபெற்ற சூரத் மாநகராட்சி தேர்தல்களில் பாஜக வுக்கு அடுத்து 2-வது இடத்தில் காங்கிரஸ் இருந்து வந்தது. தற் போதைய உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
வடோதரா மாநகராட்சியில் மொத்தமுள்ள 76 வார்டுகளில் பாஜக 69 வார்டுகளை கைப்பற்றியது. காங்கிரஸுக்கு 7 வார்டுகள் கிடைத்தன. ராஜ்கோட் மாநகராட்சி யில் மொத்தமுள்ள 72 வார்டுகளில் பாஜக 68 வார்டுகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு 4 வார்டுகள் கிடைத்தன. பாவ்நகர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 52 வார்டுகளில் பாஜக 44, காங்கிரஸ் 8 வார்டுகளை கைப்பற்றின.
ஜாம் நகர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 64 வார்டுகளில் பாஜக 50, காங்கிரஸ் 11, பகுஜன் சமாஜ் 3 வார்டுகளில் வெற்றி பெற்றன.
வாக்குப்பதிவு நடைபெற்ற 6 மாநகராட்சிகளும் பாஜக வசம் இருந்தன. அவற்றை அந்த கட்சி தக்க வைத்து கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 6 மாநகராட்சியின் 576 வார்டுகளில் பாஜக 482 வார்டுகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸுக்கு 44 வார்டுகளும் ஆம் ஆத்மிக்கு 27 வார்டுகளும் கிடைத்துள்ளன.
6 மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜக அபார வெற்றி பெற்றிருப்பதால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவின் கை ஓங்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் விஜய் ரூபானி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "குஜராத் பாஜகவின் கோட்டை என்பதை மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago