ஓசூர் நிதி நிறுவன கொள்ளை வழக்கில் 8 பேர் கைது 25 கிலோ தங்கம், துப்பாக்கிகள் ஹைதராபாத்தில் பறிமுதல்

By என். மகேஷ்குமார்

ஓசூர் முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 25 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.93 ஆயிரம் ரொக்கத்தை ஹைதராபாத் போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 8 பேரைபோலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள முத்தூட்நிதி நிறுவனத்தில் நேற்று முன்தினம் புகுந்த கொள்ளை கும்பல், மேலாளர் சீனிவாச ராகவன் மற்றும் ஊழியர்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அங்கிருந்த ரூ.10 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்க நகைகள், ரூ.93,000 ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து ஓசூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நகைகளுடன் ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த டிராக்கிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் ஹைதராபாத் நோக்கி சென்றதை போலீஸார் உறுதி செய்தனர். இதுகுறித்து தமிழக போலீஸார் ஹைதராபாத் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சரக்கு லாரி ஒன்றில் ஹைதராபாத் வந்த 8 பேரை சைபராபாத் போலீஸார் நேற்று காலையில் சந்தேகத்தின் பேரில் பிடித்துவிசாரித்தனர். அப்போது, இவர்கள்தான் ஓசூர் முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

இதுகுறித்து சைபராபாத் காவல்ஆணையர் சஜ்ஜனார் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கொள்ளை கும்பல் சரக்கு லாரி மூலம் நாக்பூர் செல்வதற்காக ஹைதரபாத்தை கடக்க முயன்றபோது போலீஸாரிடம் பிடிபட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 25 கிலோ தங்கம், ரூ.93ஆயிரம் ரொக்கம், 13 செல்போன்கள், லாரி, சரக்கு லாரி, கார், 7 துப்பாக்கிகள், 97 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். பெரிய அளவிலான நகை, துணிக்கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் மட்டும் போதாது. அலாரம் வைக்க வேண்டியதும் அவசியம்" என்றார்.

காவல் துறைக்கு முதல்வர் பாராட்டு

ஓசூரில் தனியார் நிதி நிறுவன கொள்ளை சம்பவத்தில் விரைவாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்த காவல் துறையினரை முதல்வர் பழனிசாமி பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு காவல் துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கிவரும் நிதி நிறுவனத்தில் நடைபெற்ற கொள்ளையில் திருடுபோன ரூ.10 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்கத்தையும், கொள்ளையர்களையும் துரிதமாகசெயல்பட்டு 18 மணிநேரத்தில் பிடித்த தமிழக காவல் துறையினருக்கு, குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறைக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்