நடிகர் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ‘அண்ணாத்த’ படக்குழுவைச் சேர்ந்த 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்துக்கு தொற்று இல்லை என பரிசோதனையில் தெரிய வந்தது.
‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில், சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 168-வது திரைப்படம் அண்ணாத்த. கரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் படப்படிப்பு கடந்த 14-ம் தேதி முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து 14 மணி நேரம் வரை இதன் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு நடித்து கொடுத்துக் கொண்டிருந்ததாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்துடன் நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பிரகாஷ் ராஜ், ஜாக்கி ஷராப், சூரி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் சமீபத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ரஜினிக்கு தொற்று இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். தொற்று உள்ளவர்கள் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் படப்பிடிப்பும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
படப்பிடிப்பில் இருந்து வரும் 30-ம் தேதி சென்னைக்கு சென்று தனது அரசியல் கட்சியின் பெயர், சின்னம் உட்பட பல்வேறு தகவல்களை அறிவிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago