மூன்று விவசாய சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் 9 நாட்களாகப் போராடி வருகின்றனர். இவர்களுக்கு அரசியல் கட்சிகள் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆதரவு கிடைத்து வருகிறது. இதில் ஒரு தரப்பினராக மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எதிராக ஷாஹீன்பாக்கில் போராட்டம் நடத்திய பெண்கள் உள்ளனர்.
இவர்களில் முக்கியமானவரான ஷாஹின்பாக் தாதி எனும் மூதாட்டி பில்கிஸ் பானு 3 நாட்களுக்கு முன்னர் விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வந்தார். இவரை, டெல்லியின் எல்லைக்கு முன்பாக டெல்லி போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மறுநாள் ஷாஹீன்பாக் போராட்டத்தில் பங்கேற்ற வேறு சில முக்கிய பெண்கள் டெல்லி - ஹரியானா எல்லையின் சிங்கு பகுதியை அடைந்தனர்.
இதில், கனீஸ் பாத்திமா, தட்மினா, ரேஷ்மி உள்ளிட்ட சுமார் 100 பேர் இருந்தனர். அப்போது, அவர்களில் சிலர் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் குரல் கொடுத்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், ஷாஹீன்பாக்கினரை திரும்பச் செல்லும்படி கூறி விட்டனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஹரியானா விவசாயிகள் சங்கத் தலைவர்களில் ஒருவரான ஹர்கித் சிங் கூறும்போது, ‘‘எங்களுக்கு ஆதரவாக போராட்டக் குரல் கொடுக்க வருபவர்களை வரவேற்கிறோம். ஆனால், தங்கள் கோரிக்கைகளை எங்கள் மேடைகளில் வலியுறுத்த எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்க மாட்டோம். இந்த தடையை அரசியல் கட்சிகளுக்கும் விதித்து அதன் தலைவர்களை பேச அனுமதிக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.
விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கும் 50-க்கும் மேற்பட்ட அமைப்பினரில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் உள்ளனர். அரசியல் எதிர்ப்புக்கு அனுமதித்தால் அவர்களது உணர்வு புண்படும் என்று விவசாயிகள் நினைக்கின்றனர். இதனால், விவசாயிகள் போராட்டத்தில் ஒற்றுமை குலைந்து விடாமல் இருக்க மற்றவர்களை அனுமதிக்க மறுக்கின்றனர். இதற்கிடையில், விவசாயிகளை திரிணமூல் காங்கிரஸ் தலைவியும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று தொடர்பு கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.
பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வீ பிரசாத் யாதவ் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்ட களம் இறங்குவதாக அறிவித்துள்ளார். பாட்னாவில் தர்ணாவில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago