புஷ்கரம் என்றழைக்கப்படும் புனித நதி நீராடல் விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நம் நாட்டில் உள்ள 12 புனித நதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நதியின் புனித நீராடலும் ஒவ்வொரு ராசிக்கு உரியதாக கூறப்படுகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதே நதிகளில் மகா புஷ்கரமும் நடத்தப்படுகிறது. இது பெரும் விசேஷமாக கருதப்படுகிறது. அதன்படி நம் நாட்டில் உள்ள கங்கை (மேஷம்), நர்மதை (ரிஷபம்), சரஸ்வதி (மிதுனம்), யமுனை (கடகம்), கோதாவரி (சிம்மம்), கிருஷ்ணா (கன்னி), காவேரி (துலாம்), தாமிரபரணி (விருச்சகம்), சிந்து (தனுசு), துங்கபத்ரா(மகரம்), பிரம்மபுத்ரா (கும்பம்), பரணீதா (மீனம்) ஆகிய12 ராசிகளுக்கு 12 நதிகளில் புஷ்கரம் நடத்தப்படுகிறது. அதன்படி தற்போது ஆந்திர மாநிலம், ராயலசீமா மாவட்டங்களில் ஒன்றான கர்னூல் மாவட்டத்தில் உள்ள துங்கபத்ரா நதியில் நேற்று புஷ்கர நிகழ்ச்சியை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சிறப்பு பூஜைகளில் பங்கேற்று தொடங்கி வைத்தார். அதன் பின்னர் நூற்றுக்கணக்கான மக்கள் துங்கபத்ரா நதியில் புனித நீராடினர்.
கர்னூல் மாவட்டத்தில் மந்த்ராலயம், எமிங்கனூரு, நந்திகொட்கோரு, கொடுமூரு மற்றும் கர்னூல் உள்ளிட்ட தொகுதிகளில் புனித நீராட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வரும் டிசம்பர் 1-ம் தேதி வரை இந்த புஷ்கர நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக 5 ஆயிரம் போலீஸார் பாது காப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கரோனா பரவலை தடுக்கும் விதத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கர்னூல் மாவட்ட ஆட்சியர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago