ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் உரம் தயாரிப்பதற்காக, மாட்டு சாணம் வழங்கியவர்களுக்கு அம்மாநில அரசு சார்பில் நேற்று முன்தினம் ரூ.8.97 கோடி வழங்கப்பட்டது.
சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ‘கோதான் நியாய திட்டம்’ கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதன்படி மண்புழு உரம் தயாரிப்பதற்காக மாநிலம் முழுவதும் உரக் கூடங்கள் கட்டப்பட்டன. இதற்காக கால்நடை வளர்ப்பவர்களிடம் இருந்து மாட்டு சாணம் விலைக்கு வாங்கப்பட்டது. இந்நிலையில், மாட்டு சாணம் வாங்கியதற்காக சத்தீஸ்கரை சேர்ந்த 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அம்மாநில அரசு கடந்த வெள்ளிக்கிழமை ரூ.8.97 கோடி வழங்கியது. இவ்வாறு இதுவரை அம்மாநில அரசு ரூ.47.38 கோடி வழங்கியுள்ளது.
இத்திட்டம் குறித்து முதல்வர் பூபேஷ் பாகெல் கூறும்போது, “தற்போது கட்டுமானப்பணி நடந்து வரும் உரக்கூடங்களை விரைவில் கட்டி முடிப்பது அவசியம். இதன் மூலமே அவற்றை பெண்களுக்கான மறுவாழ்வு மையங்களாக பயன்படுத்த முடியும். உரக்கூட திட்டம், கால்நடை வளர்ப்பு திட்டம், ராஜீவ் காந்தி விவசாயிகள் நியாய திட்டம் ஆகியவை பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றன” என்றார்.
சத்தீஸ்கரில் தற்போது 5,454 உரக்கூடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் இவற்றில் 3,677 உரக்கூடங்களில் மாட்டு சாணம் வாங்கப்பட்டு மண்புழு உரம் தயாரிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago