கர்நாடகாவில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை கரோனா நோயாளிகளின் உடல்நலனை க‌ருத்தில் கொண்டு முதல்வர் எடியூரப்பா உத்தரவு

By இரா.வினோத்

ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் கரோனா நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்தன. ராஜஸ்தானில் பட்டாசு வெடிப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரமும், பட்டாசு விற்பனை செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் போல கர்நாடகாவிலும் பட்டாசு வெடிக்க தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறும்போது, "தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அப்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாட்டால் கரோனா நோயாளிகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களில் கரோனா தொற்று மற்றும் உயிரிழந்தோரின் எண் ணிக்கையும் அதிகமாக இருக்கிறது என அதிகாரிகள் தெரி வித்தனர்.

அதன் அடிப்படையில், கரோனா நோயாளிகளின் உடல் நலனை காக்கும் வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அரசாணை ஓரிரு தினங்களில் வெளியிடப்படும்" என்றார்.

எடியூரப்பாவின் இந்த அறி விப்பை சுகாதாரத் துறை அதிகாரிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர் களும் வரவேற்றுள்ளனர். அதேவேளையில் இதனால் பாதிக்கப் படும் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் தொழிலாளர் களுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

லவ் ஜிகாத் முறை ஒழிக்கப்படும்

கடந்த செப்டம்பர் 23-ம் தேதிஅலகாபாத் உயர் நீதிமன்றம், ''திருமணம் செய்வதற்காக ம‌தம் மாறுவதை ஏற்க முடியாது" என தீர்ப்பளித்தது. இதையடுத்து, லவ்ஜிகாத்தை தடுக்க புதிய சட்டம்கொண்டுவரப்படும் என உத்தரபிரதேசம், ஹரியாணா, மத்திய பிரதேசம் ஆகிய பாஜக ஆளும்மாநில அரசுகள் அறிவித்தன.

இந்நிலையில் கர்நாடக முதல் வர் எடியூரப்பா கூறும்போது, "அண்மைக் காலமாக ஊடகங் களில் திருமணத்துக்காக இந்துபெண்கள் மதமாற்றம் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. லவ் ஜிகாத் என்ற பெயரில் நடக்கும் இந்த அக்கிரமத்தை ஒரு போதும் ஏற்க முடியாது. இதை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக சட்டம் இயற்றப்படும்" என்றார்.

பசுமை பட்டாசு வெடிக்கலாம்..

முதல்வர் எடியூரப்பா நேற்றிரவு விடுத்த அறிக்கையில், "தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது என்ற முந்தைய உத்தரவு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பட்டாசு வெடிப்பது மக்களின் மத நம்பிக்கையாக இருப்பதால், அதை அரசு ஏற்கிறது. எனவே கரோனா நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் பசுமை பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாத, நோயாளிகளுக்கு இடையூறு தராத குறைந்த வகையிலான பட்டாசுகளை வெடிக்கலாம். கரோனா நெருக்கடியை உணர்ந்து அனைவரும் எளிமையாக தீபாவளி கொண்டாட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்