இந்திய பங்குச் சந்தைகள் கடந்த வாரத்தில் தொடர் ஏற்றத்தில் வர்த்தகம் ஆயின. நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 553 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமானது. நிஃப்டி 143 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகம் ஆனது.
வங்கி மற்றும் நிதித் துறை சார் பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகம் ஆனதால் பங்குச் சந்தையில் தொடர் ஏற்றம் சாத்தியமானது. பிஎஸ்இ குறியீடான சென்செக்ஸ் 1.34 சதவீதம் அதாவது 553 புள்ளிகள் உயர்ந்து 41,893 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகமானது. என்எஸ்இ குறியீடான நிஃப்டி 1.18 சதவீதம் அதாவது 143 புள்ளிகள் உயர்ந்து 12,264 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகமானது.
சென்செக்ஸ் பங்குகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிகபட்ச ஏற்றத்தை சந்தித்தது. காரணம் இந்நிறுவனத்தின் ரீடெய்ல் பிரிவு சவுதி அரேபியாவில் இருந்து ரூ.9,555 கோடி முதலீட்டை பெற்றுள்ளது. இது தவிர பஜாஜ் பின்சர்வ், இன்டஸ்இந்த் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி ஆகிய பங்குகளும் ஏற்றம் கண்டுள்ளன. அதேசமயம் மாருதி, பார்தி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ், அல்ட்ரா செம்கோ, நெஸ்லே இந்தியா மற்றும் சன் பார்மா ஆகிய பங்குகள் 2.73 சதவீதம் வரை இறக்கம் கண்டுள்ளன. என்எஸ்இ தளத்தில் தனியார் வங்கி நிஃப்டி, வங்கி நிஃப்டி, நிதி சேவைகள் குறியீடு ஆகியவை 2.17 சதவீதம் ஏற்றம் கண்டன.
நிபுணர்களின் கருத்துப்படி அமெரிக்க தேர்தலில் நிலவும் நிலையற்ற தன்மைக்கு இடையிலும் சர்வதேச பங்குச் சந்தைகளில் செயல்பாடு எதிர்பார்ப்பின் அடிப்படையில் வலுவாகவே இருக்கிறது. மேலும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தனது வட்டியை பூஜ்ஜியத்துக்கு அருகிலேயே வைத்துள்ளது. இது கரோனா தாக்கத்தால் நெருக்கடிக்கு உள்ளான பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு தயாராக இருப்பதை உறுதி செய்கிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago