பிஹாரில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையப்போவது உறுதி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிஹார் சட்டப்பேரவைக்கு வரும் 7-ம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இதைமுன்னிட்டு, அராரியா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி் பேசியதாவது:
தற்போது நடைபெற்று வரும் பிஹார் தேர்தலை உலகமே கவனித்து வருகிறது. கரோனா பரவல் இருக்கும் இந்தக் காலக்கட்டத்திலும், இங்கு அதிக அளவில் வாக்குகள் பதிவாகி வருவதை உலக மக்கள் கண்டு வியந்து வருகின்றனர். இந்திய மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது இருக்கும் நம்பிக்கையையே இது பிரதிபலிக்கிறது.
பிஹார் மக்கள் தங்களின் நிலைப்பாட்டில் மிகத் தெளிவாக இருக்கின்றனர். யார் வளர்ச்சியை கொடுப்பார்கள், யார் மக்களை சுரண்டுவார்கள் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.
கடந்த 10 ஆண்டுகளாக முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள் ளன. லட்சக் கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
அதேநேரம் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியின்போது மக்களின் நிலங்களும், சொத்துகளும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தகுண்டர்களால் மிரட்டி வாங்கப்பட்டன. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்கள் மலிந்திருந்தன.
அன்றைய காட்டாட்சியில் இருந்த பிஹாருக்கும், மக்களாட்சிக்கு முக்கியத்துவம் தரும் தற்போதைய பிஹாருக்கும் இடையேயான வித்தியாசத்தை மக்கள் உணர்ந்துள்ளனர்.
எனவே, இந்த முறை பிஹாரில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகி இருக்கிறது. தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தல் வாக்குப்பதிவுகளும் இதையே எடுத்துக்காட்டுகின்றன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago