குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பதவி விலக பாஜக தலா ரூ.10 கோடி கொடுத்ததாக புகார்: இடைத்தேர்தல் நேரத்தில் வீடியோ வெளியானதால் பரபரப்பு

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலக தலா ரூ.10 கோடியை பாஜக கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோவை காங்கிரஸ் வெளி யிட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் காலியாகஉள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸிலிருந்து சமீபத்தில் விலகிய 5 எம்எல்ஏ-க்கள் பாஜக சார்பில் களமிறங்கி யுள்ளனர்.

இந்நிலையில், அகமதாபாத் தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது குஜராத் காங்கிரஸ் கமிட்டி சார்பில்ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் லிம்ப்டி தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ சோம்பாய் படேல், வேறொரு நபருடன் இந்தியில் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதற்காக தான் உள்பட 8 எம்எல்ஏ-க்களுக்கு பாஜக தலா ரூ.10 கோடி கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜக மறுப்பு

இதுகுறித்து குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சாவடா கூறும்போது, “காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை பாஜக விலைக்கு வாங்கியது இந்த வீடியோ மூலம் அம்பலமாகி உள்ளது. இதன் மூலம் காங்கிரஸை அழிக்க பாஜக முயற்சிக்கிறது” என்றார்.

இதுகுறித்து மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீல் கூறும்போது, “மக்களை தவறானவழியில் திசைதிருப்ப காங்கிரஸ் முயற்சிக்கிறது. அமித் சாவடா கூறும்போது, சோம்பாய் படேல்,கடந்த மார்ச் மாதமே கட்சியில் இருந்து விலகிவிட்டதாகக் கூறுகிறார். நான் கடந்த ஜூலை மாதம்தான் பாஜக தலைவர் பொறுப்பை ஏற்றேன். நானும், சோம்பாய் படேலும் இதுவரை சந்தித்துப் பேசியதே இல்லை. இந்தகுற்றச்சாட்டு பொய்யானது” என்றார்.

இதுதொடர்பாக சோம்பாய் படேலை தொடர்புகொள்ள செய்தியாளர்கள் முயன்றனர். ஆனால் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்