ரூ.1.27 லட்சம் கோடி வரி ரீஃபண்ட் நிதித் துறை செயலர் தகவல்

By செய்திப்பிரிவு

நடப்பாண்டில் வரிதாரர்களுக்கு ரூ.1.27 லட்சம் கோடி அளவில் வருமான வரித் துறை ரீஃபண்ட் வழங்கியுள்ளதாக மத்திய நிதித் துறை செயலர் அஜய் பூஷண் பாண்டே தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 27-ம் தேதி வரையிலான நடப்பாண்டு காலத்தில் வருமான வரித் துறை தனி நபர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் என 39 லட்சம் வரிதாரர்களுக்கு ரூ.1.27 லட்சம் கோடி ரீஃபண்டாக வழங்கியுள்ளது. இவர்களில் 37.2 லட்சம் தனி நபர்களும் 1.9 லட்சம் நிறுவனங்களும் அடங்கும்.

தனி நபர் வரிதாரர்களுக்கு ரூ.34,532 கோடியும் நிறுவன வரிதாரர்களுக்கு ரூ.92,376 கோடியும் ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரீஃபண்ட் முழுக்க முழுக்க தானியங்கி முறை மூலம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டில் கரோனா பாதிப்பு காரணத்தால் வரி வருவாய் வெகுவாகக் குறைந்தது. சிஏஜி புள்ளிவிவரங்கள் படி முதல் ஆறு மாத காலத்தில் நிறுவனங்கள் மூலமான வரி வருவாய் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 40 சதவீதம் குறைந்து ரூ.1.5 லட்சம் கோடி வசூலானது. தனி நபர்களின் மூலமான வரி வருவாய் 22 சதவீதம் குறைந்து ரூ.1.66 லட்சம் கோடி வசூலானது.

வருமான வரித் துறை தற்போது முழுமையான தானியங்கி முறைக்கு மாறியுள்ளது. வரிக் கணக்கு தாக்கல் முதல் வரிக் கணக்கு ஆய்வு, விசாரணை மற்றும் குறைதீர்ப்பு, ரீஃபண்ட் ஆகிய அனைத்தும் மனித தலையீடுகள் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்குகிறது. ரீஃபண்ட் நேரடியாக வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படுகிறது. இதனால் வரிதாரர்களுக்கும் வரித் துறைக்கும் இடையிலான உறவு மேலும் வெளிப்படைத் தன்மையுடனும் நம்பகத்தன்மை மிகுந்ததாகவும் மாறியுள்ளது என்று அஜய் பூஷண் பாண்டே கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்