பெங்களூரு போதைப் பொருள்வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேறி நேற்று கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கன்னட சின்னத்திரை நடிகை அனிகா, தொழிலதிபர் ரவீந்திரன், ஓட்டல் அதிபர் முகம்மது அனூப் ஆகிய 3 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி கைது செய்தனர்.
விசாரணையில், ஓட்டல் அதிபர் முகம்மது அனூப்பின் வங்கிக் கணக்கில் பணப் பரிமாற்றம் அதிகம் இருப்பதை அதிகாரிகள் கண்டனர். இது தொடர்பாக, கேரள மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேறியின் பெயரை அனூப் கூறியுள்ளார். பினீஷிடம் இருந்து தனக்கு அப்பணம் வந்ததாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பினீஷுக்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் கடந்த மாதம் நோட்டீஸ்அனுப்பினர். இதை ஏற்று, பெங்களூருவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் பினீஷ் கடந்த 6-ம் தேதி ஆஜரானார்.
இந்நிலையில் நேற்று 2-வது முறையாக பெங்களூரு அமலாக்கத் துறை அலுவலகத்தில் காலை 11 மணிக்கு பினீஷ் ஆஜரானார். சுமார் 3 மணி நேர விசாரணைக்கு பிறகு அவரை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து பெங்களூரு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். பினீஷை 4 நாள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கேரள அரசியலை உலுக்கி வரும் தங்கக் கடத்தல் வழக்கிலும் பினீஷ் பெயர் அடிபடுகிறது. இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் பினீஷ் ஆஜரானார். அவரிடம் 10 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத் தியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago