கரோனா வைரஸ் பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்ய பல நிபந்தனைகள் அமலில் உள்ளன. சிறப்பு தரிசன டிக்கெட்கள், விஐபி தரிசனம், அறங்காவலர் குழுவின்சிபாரிசு, இலவச தரிசனம் ஆகியவை மூலம் ஒரு நாளைக்கு சுமார் 25 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். தற்போது பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் டோலோற்சவம் ஆகிய மேலும் 3 ஆர்ஜித சேவைகளுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட்கள் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இந்த டிக்கெட்களை பெற்ற பக்தர்கள், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களையும் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த டிக்கெட் மூலம் சுவாமியை 90 நாட்களுக்குள் தரிசனம் செய்து கொள்ளலாம். ஆர்ஜித சேவைக்கான பிரசாதம் பக்தரின் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும். மேலும், சேவையில் ஆன்லைன் மூலம் முன்பணம் செலுத்திய பக்தர்களின் பெயர் பட்டியல் மூலவரின் பாதங்களில் வைத்து பூஜை செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் நவம்பரில் சோதனை அடிப்படையில் தொடங்க உள்ளது.
அவகாசம் நீட்டிப்பு
கரோனா பரவலால் இந்த ஆண்டு மார்ச் 13-ம் தேதி முதல் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய, ஆர்ஜித சேவைகள், தங்கும் அறைகளுக்கு முன்பதிவு செய்திருந்த பக்தர்கள், தங்களது பணத்தை திரும்பப் பெற வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்திருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அவர்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை refunddesk1@tirumala.org என்கிற மின்னஞ்சலுக்கு தகவல் வழங்கலாம். அல்லது இந்த பக்தர்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் அந்த டிக்கெட்டுகள் மூலம் சுவாமியை தரிசனம் செய்யலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago