புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் கடந்த 1992-ம் ஆண்டு முதல் பெண்கள் குறுகியகால பணியில் (எஸ்எஸ்சி) பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, கமாண்டர் உள்ளிட்ட உயர் பதவிகளை அவர்களால் வகிக்க முடியாமல் இருந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பெண்களையும் நிரந்தரப் பணியில் அமர்த்த வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
இதேபோல, கடற்படையிலும் பெண்களை நிரந்தரமாக பணியமர்த்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை பரிசீலித்த நீதிபதிகள், கடற்படையிலும் பெண்களை நிரந்தரமாக பணியமர்த்துமாறு கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தனர். இந்த உத்தரவை 3 மாதத்துக்குள் அமல்படுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இந்த உத்தரவை செயல்படுத்த 6 மாதம் அவகாசம் தேவை என மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்குறிப்பிட்ட உத்தரவை செயல்படுத்த வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை மத்திய அரசுக்கு அவகாசம் வழங்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago