கீரனூர் அருகே ஆடு திருடர்களை விரட்டிப் பிடித்தபோது - சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை : 4 தனிப்படைகள் தீவிர விசாரணைகுடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க முதல்வர் உத்தரவு

By கே.சுரேஷ்

கீரனூர் அருகே ஆடு திருடர்களை விரட்டிப் பிடித்தபோது, நவல்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் நேற்று அதிகாலை வெட்டிக் கொலை கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு சந்தைவெளியைச் சேர்ந்த எஸ்.பூமிநாதன் (51), திருச்சிமாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளாக திருவெறும்பூர் அருகேயுள்ள சோழமாதேவி கிராமத்தில் மனைவி, மகனுடன் வசித்து வந்தார். மகன் குகன் பிரசாத், அண்ணா பல்கலைக்கழக திருச்சி வளாகத்தில் எம்பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

பூமிநாதனும் தலைமைக் காவலர் சித்திரவேலும் நேற்று அதிகாலை 2 மணி அளவில் ரோந்து சென்றுள்ளனர். பூலாங்குடி காலனிபகுதியில் 4 பேர் 2 பைக்குகளில் வந்தனர். அவர்கள் ஆடு ஒன்றையும் வைத்திருந்தனர். சந்தேகத்தின்பேரில் அவர்களை நிறுத்தி விசாரிக்க பூமிநாதன் முயன்றார். ஆனால், அவர்கள் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றனர்.

இதையடுத்து பூமிநாதனும், சித்திரவேலும் தங்களின் இருசக்கர வாகனத்தில் தனித்தனியாக துரத்திச் சென்றனர். போலீஸார் துரத்துவதைப் பார்த்ததும் 4 பேரும்வெவ்வேறு சாலையில் தப்பிச் சென்றனர். ஆடு கொண்டு செல்லப்பட்ட வாகனத்தை போலீஸார் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.

சித்திரவேல் சென்ற வாகனத்தைவேகமாக ஓட்ட முடியாததால் பின்தங்கினார். ஆனால், பூமிநாதன்விடாமல் விரட்டிச் சென்றார். திருவெறும்பூர் - கீரனூர் சாலையில் திருச்சி மாவட்ட எல்லையைத் தாண்டி புதுக்கோட்டை மாவட்டஎல்லை பகுதியிலும் அவர்களை விரட்டிச் சென்றார். கீரனூர் அருகேபள்ளத்துப்பட்டி கிராமத்தில் இருந்து திருச்சி -புதுக்கோட்டைதேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் தார் சாலையில் இருந்த 54-ஏ ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் நிரம்பி இருந்ததால், அதற்குமேல் செல்ல முடியாமல் இருவரும் பூமிநாதனிடம் சிக்கிக் கொண்டனர்.

அவர்களை மடக்கிப் பிடித்த பூமிநாதன், சித்திரவேலை தொடர்புகொண்டு உடனே அங்கு வருமாறு கூறியுள்ளார். இருட்டில் வழிமாறிச் சென்ற சித்திரவேல், சேறும் சகதியுமான சாலையில் சிக்கிக் கொண்டார்.

இதையடுத்து, தன்னுடன் பணிபுரியும் மற்றொரு சிறப்பு உதவி ஆய்வாளரான கீரனூர் கணேஷ் நகரில் வசிக்கும் சேகருக்கு தகவல் தெரிவித்த பூமிநாதன், அவரை அங்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு வந்த சேகர், தலையில் வெட்டுக்காயங்களுடன் பூமிநாதன்இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி உடனடியாக நவல்பட்டு போலீஸாருக்கும், கீரனூர் போலீஸாருக்கும் தகவல் அளித்தார்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன், டிஐஜி சரவணசுந்தர், திருச்சி எஸ்பி சுஜித்குமார் (புதுக்கோட்டை பொறுப்பு) உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று பார்வையிட்டனர்.

பூமிநாதனிடம் பிடிபட்டவர்கள் ஆடு திருடர்கள் என்பதும், அவர்கள்தான் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘ஆடு திருடர்களை பிடித்ததும், சக போலீஸாரின் உதவிக்காக பூமிநாதன் காத்திருந்தார். அப்போது, திருடர்கள் 2 பேரும் தப்பமுயன்றுள்ளனர். அவர்களுடன் தனியாளாக பூமிநாதன் போராடியுள்ளார். திருடர்கள் தங்களது வாகனத்தில் வைத்திருந்த ஆடு வெட்டும் கத்தியை எடுத்து பூமிநாதனின் பின் தலையில் வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். கொலையாளிகள் தூக்கி எறிந்த பூமிநாதனின் தொப்பி, வாக்கி-டாக்கி, செல்போன் மீட்கப்பட்டது’’ என்றனர்.

4 தனிப்படைகள் விசாரணை

பூமிநாதன் உடலுக்கு சட்டம்,ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவர் கூறும்போது, ‘‘பூமிநாதனை கொலை செய்தவர்கள் குறித்து துப்பு கிடைத்துள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர்’’ என்றார்.

டிஐஜி சரவணசுந்தர் கூறும்போது, ‘‘கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில தடயங்கள் கிடைத்துள்ளன’’ என்றார்.

பூமிநாதனின் உடல் சோழமாதேவி கிராமத்தில் நேற்று மாலை துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

ரூ.1 கோடி நிதி

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், இரவு ரோந்துப் பணியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 2 திருடர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும்போது துரத்திப் பிடித்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர்கள், பூமிநாதனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த துயரமடைந்தேன். இக்கொடிய சம்பவத்தால் உயிரிழந்த பூமிநாதன் குடும்பத்தாருக்கு எனதுஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு அரசுசார்பில் உடனடியாக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்