2.15 கோடி குடும்ப அட்டைதார்களுக்கு ரூ.1,088 கோடியில் - பொங்கல் பண்டிகையை முன்னிட்டு : 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு : முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கும் வழங்க முதல்வர் உத்தரவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம், பருப்பு உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பை 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், வரும் 2022-ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தொகுப்பில் பொங்கலுக் குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக்கால சமையலுக்குத் தேவையான மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்கள் இடம் பெற்றிருக்கும். இவை துணிப்பையில் வைத்து வழங்கப்படும்.

அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள 2 கோடியே 15 லட்சத்து 48,060 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.1,088 கோடி செலவில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கடைகளில் பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், உலர் திராட்சை, முந்திரி மற்றும் கரும்பு ஆகியவை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் தொகுப்புடன், ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு வருகிறது. 2020-ம் ஆண்டு ரூ.1,000, இந்த ஆண்டு ரூ.2,500-ம் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.

தற்போது 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. ரொக்கப் பணம் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை. வழக்கமாக தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் கரும்பு குறித்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறியதாவது:

பொங்கலை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு சிறப்புத் தொகுப்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் பொங்கலை முன்னிட்டு கரும்பு வழங்குவது வாடிக்கை என்பதால், முழு கரும்பும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நியாயவிலைக் கடைகள் எண்ணிக்கை பொறுத்து முடிவு செய்து அறிவித்து, அந்த வகையில் பொருட்கள் அனைவருக்கும் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். இதை கண்காணிக்க வட்டாட்சியர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். பயோமெட்ரிக் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்படும். பிரச்சினை இருக்கும் பகுதியில் மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுத்து அறிவிப்பார்கள்.

கடந்த ஆண்டு கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என்று தற்போதைய முதல்வர் வலியுறுத்தினார். ஆனால், அவர்கள் ரூ.1,000 மட்டுமே வழங்கினர். திமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.5,000 வழங்குவதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில், மே மாதம் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கினார். கடந்த பொங்கலின்போது அதிமுக அரசு ரூ.2,500 கொடுத்தது எதற்காக என்பது அனைவருக்கும் தெரியும்.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறுவை நெல்லை 95 சதவீதம் கொள்முதல் செய்துவிட்டோம். விவசாயிகளுக்கு எவ்வித நிலுவையும் இல்லாமல் பணம் கொடுத்துள்ளோம். செப்.21-ம் தேதி முதல்வர் அறி வுறுத்தல்படி டெல்லி சென்று மத்திய அமைச்சரிடம் நெல் ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயர்த்த கோரிக்கை விடுத்தோம். அதன்படி, டெல்டா பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். இதுவரை எந்த அனுமதியும் அளிக்கவில்லை. சர்க்கரை அட்டைகள் யார் கேட்டாலும் அரிசி அட்டைகளாக மாற்றித் தரப்படும். 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என்ற அடிப்படையில், இதுவரை 7.50 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.

பச்சரிசி

வெல்லம்

முந்திரி

திராட்சை

ஏலக்காய்

பாசிப்பருப்பு

நெய்

மஞ்சள் தூள்

மிளகாய்த் தூள்

மல்லித் தூள்

கடுகு

சீரகம்

மிளகு

புளி

கடலைப் பருப்பு

உளுத்தம் பருப்பு

ரவை

கோதுமை மாவு

உப்பு

துணிப்பை

இவற்றுடன் ஒரு முழு கரும்பு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE