வளங்களை பகிர ‘ஒரே நாடு; ஒரே மக்கள் பிரதிநிதிகள் சபை’ : சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

வளங்களை பகிர்ந்து கொள்ள ‘ஒரே நாடு; ஒரே மக்கள் பிரதிநிதிகள் சபை’ அமைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இமாச்சலபிரதேச மாநிலம் ஷிம்லாவில் 82-வது சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கிவைத்து உரையாற்றினார்.

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குர், பல்வேறு மாநிலங்களின் பேரவைத் தலை வர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் பிரதமர் மோடி பேசிய தாவது:

ஜனநாயகம் என்பது இந்தியாவின் இயல்பு. நாட்டை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். நாம் தனிச்சிறப்புடன் கூடிய இலக்குகளை அடைய வேண்டும். ஒவ்வொருவரும் முயற்சி செய்தால் மட்டுமே இது நிறைவேறும்.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வடகிழக்கு மாநில பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, பல தசாப்தங்களாக நிறுத்தப்பட்டுள்ள பெரிய வளர்ச்சித் திட்டங்களை முடிப்பது போன்ற எண்ணற்ற பணிகள் கடந்த சில ஆண்டுகளில் அனைவரின் முயற்சியால் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து கரோனாவுக்கு எதிரான போரை ஒற்றுமையாக நடத்தியது வரலாற்றுச் சிறப்புமிக்கது. இன்று இந்தியா 110 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி புதிய மைல்கல்லை கடந்துள்ளது. ஒரு காலத்தில் சாத்தியமில்லை என்று நினைத்த ஒன்று, இப்போது சாத்திய மாகிறது.

நமது சட்டப்பேரவைகளின் பாரம் பரியங்களும், நடைமுறைகளும் இந்தியாவின் இயல்பானதாக இருக்க வேண்டும். மிக முக்கியமாக, அவையில் நமது தனிப்பட்ட நடத்தை இந்திய மாண்புகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இது நம் அனைவருக்கும் உள்ள பொறுப்பாகும்.

நமது நாடு முற்றிலும் பன்முகத்தன்மை கொண்டது. பிரிக்க முடியாத ஒற்றுமை, நமது பன்முகத்தன்மையை செழுமை யாக்கி பாதுகாக்கிறது.

அவையில் தரமான விவாதங்களுக்காக தனி நேரத்தை ஒதுக்கலாமா என்பதை நாம் பரிசீலிக்கலாம். அத்தகைய விவாதங்களில் கண்ணியமான பாரம்பரியங்கள் மற்றும் அதன் தீவிரத்தன்மை முழுமையாக பின்பற்றப்பட வேண்டும். யார் மீதும் அரசியல் ரீதியான அவதூறுகளை கூறக் கூடாது.

வளங்களை பகிர்ந்து கொள்ள ‘ஒரே நாடு ஒரே மக்கள் பிரதிநிதிகள் சபை’ என்ற யோசனையை முன்வைக்கிறேன். இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது. இதற்கு நாடாளுமன்றவாதிகள், கடமை என்ற ஒரே தாரக மந்திரத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE