டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர்கள் குழுவினர் நேற்று பார்வையிட்டு, சேத விவரங்களை கணக்கெடுத்தனர் .
தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மழைநீர் இன்னும் வடியாததால், பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை கணக்கிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, கே.ஆர்.பெரியகருப்பன், அர.சக்கரபாணி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோரைக் கொண்டகுழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையடுத்து, பயிர் சேதங்களை பார்வையிட நேற்று தஞ்சாவூர் வந்த அமைச்சர்கள் குழுவினர், மதுக்கூர் அருகே அண்டமி கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்து சேத விவரங்களை கணக்கெடுத்தனர்.
பின்னர், திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவணிதம், காவனுர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரில் மூழ்கியுள்ள விளை நிலங்களை அமைச்சர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அருந்தவப்புலம், மயிலாடுதுறை மாவட்டம் எருக்காட்டாஞ்சேரி ஆகிய இடங்களிலும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் 3,700 ஹெக்டேரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 17 ஆயிரம் ஹெக்டேரிலும், நாகை மாவட்டத்தில் 7 ஆயிரம் ஹெக்டேரிலும் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஆய்வுக்குப் பின்பு முதல்வரிடம் சேத விவரங்களை அளிக்க உள்ளோம்.
வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடிய வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயிர்க் காப்பீடுசெய்ய சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயிர்க் காப்பீடு செய்ய நவ.15-ம்தேதி கடைசி நாள் என்பதால், வரும்ஞாயிற்றுக்கிழமை (நவ.14) கூட்டுறவுச் சங்கங்களுக்கு விடுமுறை அளிக்காமல், அன்றைய தினம் இரவு வரை பயிர்க் காப்பீடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயிர்க் காப்பீடுக்கான கடைசி தேதியை நவ.30 வரை நீட்டிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago