இலங்கை தமிழர்களுக்கு திமுக அரசு என்றைக்கும் துணை நிற்கும் என்று வேலூரில் நடைபெற்ற புதிய திட்டங்கள் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
தமிழக பொது மறுவாழ்வு துறை சார்பில் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு புதிய திட்டங்கள் தொடக்க விழா வேலூரில் நேற்று காலை நடைபெற்றது. இதில், ரூ.142.16 கோடியில் 3,510 குடியிருப்புகள் கட்டுதல், 78 முகாம்களுக்கு ரூ.12.41 கோடியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல்,18,890 குடும்பங்களுக்கு எரிவாயு உருளை இணைப்புடன் உபகரணங்கள் வழங்குதல், 58,747 பேருக்கு உயர்த்தப்பட்ட பணக் கொடை வழங்குதல் என மொத்தம் ரூ.225.86 கோடி மதிப்புள்ள புதிய திட்டங்கள் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய திட்டங்களை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: இலங்கை தமிழர்கள் என ஒரு அடையாளச் சொல்லாகத்தான் நான் அழைத்தேன். மற்றபடி தமிழர்கள் அனைவரும் எங்கே எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள்தான்.
இலங்கை தமிழர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்துவரக்கூடிய இயக்கம்தான் திமுக என்பதை யாரும் மறைத்திட முடியாது. கடந்த 1983 முதல் ஈழத்தில் இருந்து தமிழ் மக்கள் இங்கு வருவது தொடங்கியது. அவர்களுக்காக முகாம்கள் அமைக்கப்பட்டன. முகாம்கள் மோசமாக இருப்பதை உணர்ந்து 1997-ல் அன்றைய முதல்வர் கருணாநிதி, ஏராளமான திட்டங்களை அறிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு அவர்களுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை. கவலைப்படவும் இல்லை.
இப்போது, திமுக அரசு பொறுப்பேற்றதும் இலங்கை தமிழர்களுக்கு நல்வாழ்வு திட்டங்களை தொடங்கி இருக்கிறோம். உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காக அகதிகள் முகாம் என்பதை மாற்றி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் என்று நான் அறிவித்தேன்.
தற்போது, நாம் பொறுப்பேற்றதும் 106 முகாம்களில் உள்ள 19,046 குடும்பங்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7,469 வீடுகள் கட்டித்தரப்பட உள்ளன. முதற்கட்டமாக 290 சதுரடி பரப்பளவு கொண்ட 3,510 புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் இங்கே நாட்டப்படுகிறது. குடிநீர், மின்சாரம், சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்த ரூ.30 கோடியில் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
நீங்கள் ஆதரவற்றவர்கள் அல்ல. என்னை நீங்கள் உங்களின் உடன் பிறப்பாக நினைத்துக்கொள்ளுங்கள். ஒரு ஜன்னல் மூடினாலும் மற்றொரு ஜன்னல் திறக்கும் என்பார்கள். ஆனால், இலங்கை தமிழர்களுக்காக திமுக அரசு தனது கதவை திறந்து வைத்திருக்கிறது. என்றைக்கும் இந்த அரசு உங்களுக்கு துணை நிற்கும் என உறுதி அளிக்கிறேன்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago