தமிழகத்தின் 9 மாவட்டங்களில் - 2 நாட்கள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது:

இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நீடித்து வருகிறது. இதன் காரணமாக நவ.1, 2 தேதிகளில் (இன்றும் நாளையும்) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நவ. 3, 4 தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மற்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். ஞாயிற்றுக்கிழமை காலை8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, திருவாரூர், நன்னிலம், புதுக்கோட்டை மாவட்டம்மணமேல்குடி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் நவ.1-ம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் 3-ம் தேதி வரை கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்