தமிழகத்தில் நவ.15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - திரையரங்குகள் 100% இயங்க அனுமதி : கடைகளுக்கான நேரக்கட்டுப்பாடு நீக்கம் முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவ.15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் கடைகள், உணவகங்களுக்கான நேரக்கட்டுப்பாடு நீக்கப்படுவ துடன், திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வரும் அக்.31-ம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. பண்டிகைக்காலங்களில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்று நிலையை கருத்தில் கொண்டும் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தவும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. பண்டிகைக் காலங்களில், பொதுமக்களின் வேண்டுகோள் படியும் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் மட்டுமே தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் பண்டிகை நாட்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவதை கடைபிடித்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

l பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் ஒரு இடத்தில் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில், அனைத்து கடைகள், உணவகங்கள், அடுமனைகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்ற நேரக்கட்டுப்பாடு இன்று முதல் தளர்த்தப்படுகிறது.

l அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில், பயிற்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் பயிற்சி தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுகிறது.

l பின்வரும் செயல்பாடுகளுக்கு வரும் நவ.1-ம் தேதி முதல் அனுமதியளிக் கப்படுகிறது.

l அனைத்து பள்ளிகளிலும், ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகள் வரை சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும்.

l திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் விதிகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

l கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடத்தலாம்.

l ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன் தனித்து இயங்கும் மதுக்கூடங்களும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

l கேரளா தவிர மற்ற மாநிலங்களுக்கிடையிலும் மாவட்டத்துக்கு உள்ளும் மாவட்டங்களுக்கு இடையிலும் சாதாரண மற்றும் குளிர்சாதன பேருந்து போக்குவரத்து 100 சதவீத பயணிகளுடன் அனுமதிக்கப்படுகிறது.

l அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் உள்ளிட்ட அரசு பயிற்சி நிலையங்கள் 100 சதவீதம் பயிற்சியாளர்களுடன் செயல்படலாம்.

l தேவையான எண்ணிக்கையில் பணியாளர்கள், கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் அனுமதிக்கப்படுகிறது.

l ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக் கப்படும்.

l அதேநேரம் திருவிழாக்கள், அரசியல் நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.

l கரோனா கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

l முதல் மற்றும் 2-வது தவணை தடுப் பூசி செலுத்திக் கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி, நோய் பரவலை தடுக்க உதவ வேண்டும்.

இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்