குமரி மாவட்டத்தில் 23 கிராமங்களை சூழ்ந்த வெள்ளம் :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி இரவு முதல் கனமழை பெய்தது. தொடர் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பி வருகின்றன. மழை மற்றும் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் பேச்சிப்பாறை, மரப்பாடி, வலியாற்றுமுகம், அருவிக்கரை, மாத்தூர், திக்குறிச்சி, காப்பிக்காடு, மங்காடு, ஞாறான்விளை, பிலாந்தோட்டம், வாவறை, இஞ்சிபறம்பு, பள்ளிக்கல், ஏழுதேசம் உள்ளிட்ட 23 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. அங்கிருந்த மக்களை தீயணைப்புத் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் ரப்பர் படகு மூலம் மீட்டு சிறப்பு முகாம்களில் தங்க வைத்தனர்.

மலை கிராமங்களுக்கு செல்லும் 50-க்கும் மேற்பட்ட சாலைகள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின. தோவாளை பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 50 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

குறும்பனையைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும்நிஷான் (17) என்பவர் நண்பர்களுடன் கடியப்பட்டணம் தடுப்பணையில் குளித்தபோது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். அருமனை முழுக்கோட்டில் உள்ள குளத்தில் மழையின்போது குளித்துக் கொண்டிருந்த ஜெபின்(18) என்பவர் நீரில் மூழ்கிஇறந்தார். வாளையத்துவயலைச் சேர்ந்த சித்திரைவேல் (40) என்பவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை தீயணைப்புத் துறையினர் 2-வது நாளாக தேடி வருகின்றனர்.

நேற்று காலை முதல் மழை சற்று ஓய்ந்ததையடுத்து மீட்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 275 மி.மீ. மழை பதிவானது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 20,862 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 1,915 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 143 அடி உயரம் உள்ளபாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 23 அடி உயர்ந்து தற்போது 131.30 அடியாக உள்ளது. அதேபோல சேர்வலாறு அணை நீர்மட்டமும் ஒரேநாளில் 22 அடி உயர்ந்துள்ளது. 52.25 அடி உயரம்உள்ள கொடுமுடியாறு அணை நிரம்பியது. தென்காசிமாவட்டத்திலும் அணை பகுதிகளில் கனமழை பெய்தது. ஒரே நாளில் கடனாநதி அணை நீர்மட்டம் 15 அடியும் ராமநதி அணை நீர்மட்டம் 13 அடியும் உயர்ந்தது. குற்றாலம் அருவிகளில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்