சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் - கே.சி.வீரமணி வீட்டில் சோதனை : உறவினர்கள் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்தினர்

By செய்திப்பிரிவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் பேரில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு, நிறுவனங்கள், அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை இடையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கே.சி.வீரமணி (57). இவர்,கடந்த 2013 முதல் 2021-ம் ஆண்டுவரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்துள்ளார். இதில் 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 654 சதவீத அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக வீரமணி மீது வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவுகாவல் ஆய்வாளர் விஜய் நேற்று முன்தினம் (செப்.15) வழக்கு பதிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து, கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய ஆதரவாளர்கள் என கருதப்படும் நபர்களின் வீடுகள் என 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் வீரமணியின் வீடு உள்ளிட்ட 15 இடங்கள், வேலூர் மாவட்டம் மேல்பட்டி அருகேவீரமணிக்கு சொந்தமான பாலாறு வேளாண் கல்லூரி, போளூர் குருவிமலை கிராமத்தில் உள்ள வீரமணியின் மாமனாருக்கு சொந்தமான 2 வீடுகள், சென்னையில் சாந்தோம், அண்ணா நகர், சூளைமேடு, கொளத்தூர் என 6இடங்கள், ஓசூரில் வீரமணி கட்டியுள்ள நட்சத்திர ஓட்டல், பெங்களூருவில் உள்ள வீரமணியின் வீடு என மொத்தம் 35 இடங்களில் நேற்று காலை 7 மணி முதல் ஒரே நேரத்தில் சோதனை தொடங்கியது. லஞ்ச ஒழிப்பு பிரிவு மேற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டையில் உள்ள வீரமணியின் வீட்டில் டிஎஸ்பி ராஜேஷ்தாஸ் தலைமையில் 8 அதிகாரிகள் மற்றும் 25-க்கும் மேற்பட்ட போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீரமணி வீட்டில் இருந்தார்.

வழக்கு பதிவு விவரம்

கடந்த 2016 ஏப்ரல் 1-ம் தேதி கணக்கின்படி கே.சி.வீரமணி மற்றும் அவரை சார்ந்தவர்களின் சொத்து மதிப்பு ரூ.25 கோடியே 99 லட்சத்து 11 ஆயிரத்து 727 ஆக இருந்தது. இது, 2021 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி ரூ.56 கோடியே 60 லட்சத்து 86 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது. இதில் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்து மதிப்பு மட்டும் ரூ.28 கோடியே 78 லட்சத்து 13 ஆயிரத்து 758 ஆக உள்ளது. இது 654 சதவீதம் அதிகம் என்ற அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிமுகவினர் போராட்டம்

லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தும் தகவலை அறிந்ததும் வீரமணி வீட்டின் முன்பு அதிமுக நிர்வாகிகள் திரண்டு போராட்டம் நடத்தினர். போலீஸாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

வீரமணி வீட்டின் முன்பாக செய்திசேகரிக்க வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது வாணியம்பாடி முன்னாள் எம்எல்ஏ கோ.வி.சம்பத்குமார், அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில், 2 செய்தியாளர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து செய்தியாளர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.34 லட்சம் பறிமுதல்

லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் என35 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.34 லட்சத்து 1,060 ரொக்கம்ரூ.1.80 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள், ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளிட்ட 9 சொகுசு கார்கள், 5 கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள், 623 பவுன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளிப் பொருட்கள், வங்கி பாஸ் புத்தகங்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வீரமணியின் ஜோலார்பேட்டை வீட்டில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 275யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்