தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனி வேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு, மகளிர் சுயஉதவிக் குழுக்களின் ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள திமுக அரசின் முதல் பட்ஜெட், சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. முதல்முறையாக காகிதமில்லாத இ-பட்ஜெட்டை நிதி யமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
l ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின்கீழ், 4,57,645 மனுக்கள் பெறப்பட்டு, 2,29,216 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
l 1921-ல் இருந்து நடந்த சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும்.
l சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு புத்துயிர் அளிக்கப்படும். 2010 முதல் வழங்கப்படாமல் இருக்கும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ இனி ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி, ரூ.10 லட்சத்துடன் வழங்கப்படும்.
l தொல்லியல் ஆய்வுகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்படும். கீழடி, சிவகளை, கொடு மணல் ஆகிய பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் பாது காக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்.
l ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் 1,000 புதிய பேருந்துகள் வாங்க ரூ. 623 கோடியே 59 லட்சம் நிதி ஒதுக்கீடு.
l காவல் துறையில் காலியாக உள்ள 14,317 பணியிடங்கள் நிரப்பப்படும்.
l அடுத்த 10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணை களும், கதவணைகளும் கட்டப்படும்.
l முதல்வரின் தலைமையில் ரூ.500 கோடியில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்.
l திட்ட மதிப்பீடு, ஒப்பந்தப்புள்ளி, திட்ட மேற்பார்வை, கண்காணிப்பு மற்றும் பட்டியலிடும் நடைமுறைகள் அனைத் தும் ஓராண்டுக்குள்ளாக முழுமையாக மின்னணுமயமாக்கப்படும்.
l கிராமங்களில் வீடு இல்லாத 8,03,924 குடும்பங்களுக்கும் அடுத்த 5 ஆண்டு களில் வீடுகள் வழங்கப்படும்.
l சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக மீண்டும் அளிக்கப்படும்
l ரூ.1,200 கோடியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், ரூ.100 கோடியில் நமக்கு நாமே திட்டம் தொடங்கப்படும்.
l சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகளின் உதவியுடன் ரூ.5,500 கோடி சிறப்பு கோவிட் கடன் உட்பட ரூ.20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும்.
l ‘கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்’ என்ற புதிய திட்டம் ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்படும்.
l சுத்தமான, பசுமையான சென்னைக்கு முக்கியத்துவம் அளித்து ‘சிங்கார சென்னை 2.0’ தொடங்கப்படும்.
l மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் பகுதி களுக்கு புதிய பெருநகர வளர்ச்சிக் குழுமங்கள் ஏற்படுத்தப்படும்.
l நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க மானியமாக ரூ.703 கோடி வழங்கப்படும்.
l மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கைகள் தயார் செய்யப்படும்.
l தமிழகத்துக்கென தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை வகுக்க உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.
l இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
l தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இதற்கு முதல்கட்டமாக ரூ.2 கோடி ஒதுக்கப்படும்.
l விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும்.
l திருவண்ணாமலை, தருமபுரி, திருநெல் வேலி, விருதுநகர், சிவகங்கை, விழுப் புரம், நாமக்கல், தேனி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.
l அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் புவியியல் புதைபடிவ பூங்கா ரூ.10 கோடியில் அமைக்கப்படும்.
l துணிநூல் துறைக்கு தனி இயக்குநரகம் உருவாக்கப்படும்.
l பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மூலம் புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்.
l அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறுகால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்.
l கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2,756 கோடி தள்ளுபடி செய்யப்படும். இதற் காக, ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
l பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து, பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி ரூ.3 அளவுக்கு குறைக்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,160 கோடி இழப்பு ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago