அமெரிக்க டாலர்கள் கடத்தப்பட்ட வழக்கில் கேரள முதல்வர் பினராயிவிஜயன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தியுள்ளது. இதன்காரணமாக கேரள அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரத்துக்கு பல கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தி வரப்பட்டது கடந்த ஆண்டு ஜூலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஸ்வப்னா சுரேஷ், சரித் குமார், பாசில் பாரித், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் உட்பட 8 பேர்கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து சுங்கத் துறை, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு அமைப்புஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருவனந்தபுரத்தில் இருந்து ஓமன் நாட்டுக்கு ரூ.1.30 கோடி மதிப்பிலான 1.9 லட்சம் அமெரிக்க டாலர்கள் கடத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. தங்கக் கடத்தல், டாலர் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், டாலர் கடத்தல் வழக்கில் முக்கிய எதிரிகளில் ஒருவரான சரித் குமார், சுங்கத் துறை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபுஅமீரக தூதரகத்தில் பணியாற்றியவர். அவரது வாக்குமூலத்தில் முதல்வர் பினராயி விஜயன் மீது பகிரங்கரமாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 2017-ம் ஆண்டில் முதல்வர் பினராயி விஜயன், அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றார். அப்போது ஸ்வப்னா சுரேஷ் என்னை தொடர்புகொண்டு, ‘முதல்வர் ஒரு பார்சலை மறந்துவிட்டு சென்றுவிட்டார். அந்த பார்சலை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். தலைமைச் செயலகத்துக்கு வந்து பார்சலை பெற்றுக் கொள்ளுங்கள்’ என அறிவுறுத்தினார். அதன்பேரில் நான் தலைமைச் செயலகம் சென்று பார்சலை பெற்றேன்.
ஐக்கிய அரபு அமீரக அலுவலகத்தில் இருந்த எக்ஸ்ரே இயந்திரத்தில் பார்சலை பரிசோதித்தபோது, அதில் முழுவதும் ரூபாய் நோட்டுகள் இருந்தன. அவை அனைத்தும் அமெரிக்க டாலர் நோட்டுகள். இதை ஸ்வப்னாவிடம் கூறினேன். ஆனால், இதுகுறித்து யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது என்று ஸ்வப்னா கூறிவிட்டார்.
அதன்பிறகு தூதரக அலுவலக அதிகாரி அகமது, அந்த பார்சலை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எடுத்துச் சென்று முதல்வர் பினராயி விஜயனிடம் ஒப்படைத்தார். இவ்வாறு சரித் குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டாலர் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன், சட்டப்பேரவை முன்னாள் தலைவர்ராமகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு சுங்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டாலர்கடத்தல் வழக்கில் முதல்முறையாக முதல்வரின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவை புறக்கணிப்பு
இந்த விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதை அவைத் தலைவர் நிராகரித்துவிட்டார். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தை நேற்று புறக்கணித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, போட்டி சட்டப்பேரவை கூட்டத்தையும் அவர்கள் நடத்தினர்.இதுகுறித்து கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் கூறும்போது, ‘‘பினராயி விஜயன், தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பதற்கு உரிமை இல்லை. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். சோலார் பேனல் வழக்கில் அன்றைய முதல்வர் உம்மன் சாண்டியை முதல்வர் பதவியில் இருந்துவிலக பினராயி விஜயன் வலியுறுத்தினார். அப்போது பேசிய வார்த்தைகளை அவர் நினைவுகூர வேண்டும். தற்போது தன் மீதான குற்றச்சாட்டுக்கு தார்மீக பொறுப்பேற்று உடனடியாக பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
முதல்வர் பதவி விலகக் கோரி காங்கிரஸ் கட்சி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் கேரள அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago