தமிழகத்தில் 18 முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின், திருப்பூரில் நேற்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 2,124 முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டமும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்துவதும் அமலானது. மார்ச் மாதத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கும், தடுப்பூசி செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. மே 1-ம் தேதி தொடங்குவதாக இருந்த இந்த திட்டம், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மே 20-ம் தேதி முதல் 18 வயது முதல் 44 வயதுள்ளோருக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம், தொடங்கப்படும் என தமிழக சுகாதாரத் துறை அறிவித்தது.
இந்நிலையில் சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்று வரும் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார்.
பின்னர் அங்கிருந்து திருப்பூர் பெருமாநல்லூர் அருகே நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா வளாகத்தில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன், முத்துசாமி, கயல்விழி, செந்தில்பாலாஜி, ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் 2,124 முகாம்கள்
தடுப்பூசி திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தவுடன், முன்பதிவு செய்திருந்த 20 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். முதல்வர் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 2,124 முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.இதற்கிடையே கரோனா நிவாரண பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, முதல்வர் ஸ்டாலினிடம், திருப்பூர் தொழில் துறையினர் உட்பட பலரும் ரூ. 2கோடியே 70 லட்சம் நிதி அளித்தனர்.
ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவர் கே.ஆர். நாகராஜன் ரூ. 1 கோடிக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ராஜா எம்.சண்முகம் ரூ. 50 லட்சம் உட்பட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில், திருப்பூரில் மொத்தமாக ரூ. 2 கோடியே 70 லட்சம் மதிப்பிலான காசோலைகள் முதல்வரிடம் வழங்கப்பட்டன.
500 படுக்கை வசதிகள்
முன்னதாக சேலம் வந்த முதல்வர் ஸ்டாலின், சேலம் இரும்பாலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இடத்திலேயே அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதி கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.பின்னர் மையத்தை பார்வையிட்ட முதல்வர், “மையத்தை விரிவாக்கம் செய்து கூடுதலாக 500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்தி இந்தியாவிலேயே முதன்மையான சிறப்பு சிகிச்சை மையமாக இதை மாற்ற வேண்டும், விரிவாக்க பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்” என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், சித்த மருத்துவத் துறை சார்பில் சேலம் அரசு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையத்தில் கூடுதலாக அமைக்கப்பட்ட 100 படுக்கை வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago