எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி டெபாசிட் கூட வாங்க முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), தேவராஜ் (ஜோலார்பேட்டை), நயீம் அகமது (வாணியம்பாடி), வில்வநாதன் (ஆம்பூர்) ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜோலார் பேட்டை ரயில் நிலையம் அருகே நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: முதல்வர் பழனிசாமி அமைச்சரவையில் 3 மணிகள் உள்ளன. தங்கமணி, வேலு மணி, வீரமணி. இதில், வேலுமணி அப்பட்ட மாக ஊழல் செய்பவர், தங்கமணி சத்தமில்லாமல் ஊழல் செய்பவர், வீரமணி எப்படிபட்டவர் என உங்களுக்கே தெரியும். அவர் அமைச்சராக இருந்த காலத்தில் இந்த மாவட்டத்துக்காக எதையும் செய்யவில்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீரமணி வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். ஆனால் , சோதனையின் முடிவு என்ன? என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது இதுவரை வெளிவரவில்லை.
அமைச்சராக உள்ள வீரமணி இடங்களை வளைத்து போடுவதில் கை தேர்ந்தவர். வேலூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தை வளைத்துபோடும் முயற்சியில் நீதிமன்றம் வரை விவகாரம் சென்றது. இது அனைவருக்கும் தெரியும். இது மட்டுமின்றி மணல் கொள்ளை, நில அபகரிப்பு, விலைமதிப்புள்ள இடங் களை மிரட்டி தனது குடும்ப உறுப்பினர்கள் பெயருக்கு மாற்றுவது போன்ற பல வேலைகளை வீரமணி செய்து வருகிறார். அவர், இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். அதை இந்த தொகுதி மக்கள் செய்து காட்ட வேண்டும்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், வீரமணி ஆகியோர் வீடுகளிலும், அவர்களது உறவினர்கள் வீடுகளிலும் வருமானவரித் துறை சோதனை நடந்தது. அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதும் இதுவரை வெளிவரவில்லை. பாஜக அரசு அதிமுக அமைச்சர்களின் வருமான ஆதாரங்களை கைப்பற்றி வைத்துக்கொண்டு, அவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
டெல்லியில் 3 வேளாண் சட்டங் களை எதிர்த்து, விவசாயிகள் கடந்த 124 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதைப்பற்றி கவலைப்படாத முதல்வர் பழனிசாமி, தான் ஒரு விவசாயி எனக் கூறுகிறார்.
சேலம் மாவட்டத்தில் எடப்பாடி தொகுதி யில் நான் தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்றிருந்தேன். அப்போது, மக்கள் எழுச்சியை நான் கண்டு வியந்தேன். இந்த முறை எடப்பாடி தொகுதியில் பழனி சாமி டெபாசிட் கூட வாங்க முடியாது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, மாநிலங்களவையில் அவர் கள் எதிர்த்து வாக்களித்திருந்தால் அந்த சட்டமே நிறைவேறி இருக்காது. அங்கு அதிமுகவும் பாமகவும் ஆதரவு தெரிவித்த விட்டு, இப்போது தேர்தல் அறிக்கையில் அந்தச் சட்டத்தை நீக்க வலியுறுத்துவோம் என நாடகமாடுகிறார்கள்.
கூட்டுறவு வங்கியில் பெறப்பட்ட கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்த பழனிசாமி பாக்கியுள்ள ரூ.7 ஆயிரம் கோடியை யார் தள்ளுபடி செய்வார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்தக் கடனை தள்ளுபடி செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
‘இயற்கையும் கடவுளும் காப்பாற்ற மாட்டார்கள்’
ராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஆர்.காந்தி (ராணிப்பேட்டை), ஈஸ்வரப்பன் (ஆற்காடு), முனிரத்தினம் (சோளிங்கர்), கவுதம் சன்னா (அரக்கோணம்) தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ராணிப்பேட்டையில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மு.க.ஸ்டாலின் பேசியது: இயற்கையும் கடவுளும் தனக்கு துணையாக இருப்பதாக பழனிசாமி பேசி இருக்கிறார். சுனாமி, தானே, ஒக்கி, கஜா, நிவர், புரெவி புயல்கள், வெள்ளத்தில் மிதந்த சென்னை, நீலகிரி நிலச்சரிவு என அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இயற்கை பேரிடர்தான் அதிகம் நடக்கிறது. பேரிடர் காலங்களில் மக்களையும் சந்திப்பதில்லை. சாமி சிலைகளை கடத்தியவர்களை காப்பாற்றிய ஆட்சி பழனிசாமி ஆட்சி. சிலை கடத்தலை தடுக்க அமைக்கப்பட்ட பொன்.மாணிக்கவேலுவுக்கு துன்பங்களைக் கொடுத்தார்கள். தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொலை, சாத்தான் குளத்தில் அப்பா, மகன் அடித்துக் கொலை, நீட் தேர்வால் 14 பேர் தற்கொலை, காலை பிடித்து பதவி வாங்கிவிட்டு அந்த காலை வாரிய துரோகம் என இவ்வளவு பாவங்களை செய்தவர்களை இயற்கையும் கடவுளும் மக்களும் காப்பாற்ற மாட்டார்கள். இவ்வாறு பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago