கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

By செய்திப்பிரிவு

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக நீண்டகாலமாக கோரி வந்தது. இதற்காக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. முதல்வர் பழனிசாமியை பாமகநிர்வாகிகள் சந்தித்து, இதுதொடர்பாக மனுக்களையும் வழங்கினர்.

அதன்பிறகும் தங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படாத நிலையில், கடந்த டிசம்பரில் பாமக மற்றும்வன்னியர் சங்கம் சார்பில் மீண்டும் போராட்டம் தொடங்கப்பட்டது. பல கட்ட போராட்டங்கள் நடந்த நிலையில், தனி ஒதுக்கீடு கோரிக்கையை மாற்றி, உள்ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான விவரங்களை சேகரிக்க, நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து முதல்வர் உத்தரவிட்டார். அந்த ஆணையம், சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமசோதா, கடந்த 26-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மிகவும் பிற்பட்டோர் வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம், சீர்மரபினருக்கு 7 சதவீதம், இதரமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 2.5 சதவீதம் வழங்கசட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்காலிகமானது

இந்த சட்ட மசோதா குறித்து பேரவையில் முதல்வர் பழனிசாமி பேசும்போது, ‘‘இந்த இடஒதுக்கீடு தற்காலிகமானதுதான். தமிழகத்தில் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக ஆணையம் அமைக்கப்பட்டு பணியும் தொடங்கப்பட்டுவிட்டது. ஆணையத்தின் பரிந்துரை பெறப்பட்டு, அதனடிப்படையில் ஒவ்வொரு சாதிக்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அதை பரிசீலித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன்பேரில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அறிவிக்கை பிப்.26-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சட்ட மசோதா இந்த தேதியில் இருந்து அமலுக்கு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்